வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (18:18 IST)

ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் பதிவு: இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது

இலங்கையின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்படுவது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதும் கடிதங்களை முன்வைத்து, எழுதப்பட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 


 
ஆங்கிலத்தில் ஷெனாலி டி வடுகே என்பவரால் எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையின் தலைப்புதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையையும் இலங்கை – இந்தியா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தையும் மீறுவதாகவும், தமிழக முதலமைச்சர் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார் என்பதாலேயே பிற நாடுகளுக்குச் சொந்தமான கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எப்போதும் இலங்கை அரசு மீது குற்றம் சுமத்த தயாராக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தங்களுடைய மீனவர்களுக்காக குரல்கொடுக்க முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
 
பிரதமர் மோடி ஒன்றும் தன்னுடைய அச்சுறுத்தல்களுக்கு தலையாட்டும் பொம்மையில்லை என்பதை தமிழக முதல்வர் விரைவிலேயே புரிந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மோடிக்கு எழுதும் கடிதங்கள் பற்றிய கட்டுரை இலங்கை அரசு பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியாகியிருந்தது.


 

 
இலங்கையின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியாட்கள் கருத்துத் தெரிவிக்கும் பகுதியில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரைக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்டணத்தைத் தெரிவித்துள்ளனர்.
 
“கருத்து வேறுபாடுகள் என்பது அரசியலில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பதை ஏற்க முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
 
“இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியை தங்களுக்கு நெருக்கமானவராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இது குறித்துக் கேள்வியெழுப்பினார்.
 
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 
கட்டுரை பிரசுரமானதையடுத்து பாதுகாப்பு அமைச்சக இணையதளம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.
 
உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தன் அதிருப்தியைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டுமென்றும் இலங்கை அரசை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரச் செய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், தமது இணையதளத்தில் சம்பந்தப்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இது சம்பந்தமான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.