1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2016 (18:19 IST)

ஜெ. மீதான 'பிறந்தநாள் பரிசு வழக்கு' : நான்கு வாரங்கள் ஒத்திவைப்பு

ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கு தள்ளி வைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைகேடாக பிறந்தநாள் பரிசு பெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் இறுதிக்கட்ட விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.


 

 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
அப்போது ஜெயலலிதா தரப்பிலான வாதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டது என்றும், அதிலும் காலம் கடந்தே அந்த வழக்கு பதியப்பட்டது என்றும் கூறப்பட்டது.
 
மேலும், இதே காரணங்களை ஏற்றக்கொண்டே, முன்னதாக உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்றும் ஜெயலலிதா தரப்பில் குறிப்பிடப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு அந்த அமர்வு ஒத்திவைத்தது.
 
ஜெயலலிதா முதன்முறையாக முதல்வர் பொறுப்பு வகித்தபோது 1992 ஆம் ஆண்டில் அவரது பிறந்த நாள் பரிசாக 2 கோடி ரூபாய் அளவுக்கு வந்த காசோலைகளை, ஜெயலலிதா தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டதாகவும், இதற்காக முறையாக அவர் கணக்கு காட்டவில்லை என்றும் ஜெயலலிதா மீது சிபிஐ வழக்கு தொடுத்திருந்தது.
 
அந்த வழக்கை உயர்நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டில் ரத்து செய்து உத்தரவிட்டது. தொடர்ந்தே இந்த மேல்முறையீடு வழக்கு இப்போது நடைபெறுகிறது.
 
இதே மாதத்தின் துவக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது இந்த இரண்டு வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணைகளும் ஒரே காலகட்டத்தில் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்திற்கான தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்கிற காரணத்தாலும், இந்த இரண்டு வழக்குகளும் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
 
தினகரன் வெடிகுண்டு வழக்கு
 
இதனிடையே, தினகரன் நாளேட்டின் மதுரைக் கிளை அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பான மேன்முறையீட்டு வழக்கில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 17 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 5 பேர் தவிர மற்ற 12 பேரும் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் விசாரணையைத தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
 
இதைக் கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரைக் கொண்டுள்ள அமர்வு, அந்த குறிப்பிட்ட 12 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.