1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (12:08 IST)

காஸாவிலிருந்து ராணுவத்தை விலக்குவதாக இஸ்ரேல் அறிவிப்பு

காஸாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.


காஸாவுக்கு வெளியில், "பாதுகாப்பு நிலை"களில் அந்தத் துருப்புகள் நிறுத்தப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
 
உள்ளூர் நேரப்படி காலை எட்டு மணிக்கு 72 மணி நேர போர் நிறுத்தம் துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, இஸ்ரேலியப் படையினர் காஸாவிலிருந்து விலகுவார்கள் என லெப்டினென்ட் கர்னல் பீட்டர் லேனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
போராளிகள் பயன்படுத்திய குகைகளை அழிப்பது என்பது என்ற இலக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த நான்கு வார கால மோதலில் 1,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 67 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இஸ்ரேலில் பணியாற்றிவந்த தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தாக்குதலில் பலியானார்.
"இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், காஸாவுக்கு வெளியில் 'பாதுகாப்பு நிலை'களில் நிறுத்தப்படுவார்கள். அந்த நிலைகளில் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம்" என லேனர் தெரிவித்துள்ளார்.
 
போர் நிறுத்தத்திற்கு முன்பாக தாக்குதல்
 
போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, மத்திய இஸ்ரேலின் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதால், ஜெருசலத்திலும் டெல் அவிவிலும் வான் தாக்குதல் எச்சரிக்கை சங்குகளின் சத்தம் கேட்டது.
 
போர் நிறுத்தம் துவங்குவதற்கு முன்பாக, இஸ்ரேலிய விமானப் படை, குறைந்தது ஐந்து முறையாவது காஸா மீது தாக்குதல் நடத்தியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
'ஆபரேஷன் ப்ரொடெக்டிவ் எட்ஜ்' என்ற பெயரிலான இந்தத் தாக்குதல் நடவடிக்கையை ஜூலை எட்டாம் தேதி இஸ்ரேல் துவங்கியது. ராக்கெட் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதும் பாலஸ்தீனியப் போராளிகள் பயன்படுத்திவந்த குகைப்பாதைகளை அழிப்பதுமே இந்தத் தாக்குதலின் இலக்காக இருந்தது.