வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (09:40 IST)

மீண்டும் பிசிசிஐ தலைவராவதற்கு அனுமதி கோரும் என்?

ஐபிஎல் போட்டிகளின்போது, பந்தயம் கட்டுதல் மற்றும் போட்டியை முன்கூட்டியே நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளிலிருந்து தனது பெயரை முட்கல் அறிக்கை நீக்கியுள்ள சூழ்நிலையில், தான் மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-இன் தலைவர் பதவியை ஏற்க அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் என்.ஸ்ரீநிவாசன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஐபிஎல் ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த முட்கல் குழுவின் அறிக்கை தொடர்பில் என்.ஸ்ரீநிவாசனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்திய கிரிக்கெட் வாரியமும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
 
நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரத்தின் முற்பகுதியில் சமர்ப்பித்தது.
 
இந்திய கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் ஐபிஎல் ஆட்டத் தொடரில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று முட்கல் குழு அறிக்கை தெரிவிப்பதை மறுத்துள்ளது.
 
முட்கல் குழு அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வீரருக்கு அப்போதைய பிசிசிஐ அதிகாரி ஷஷங்க் மனோகர் வாய்மொழியாக கண்டனம் தெரிவித்ததாகவும் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் எவரும் விதி மீறிய வீரருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பது தவறு என்றும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
 
இதனிடையே, இந்த ஐபிஎல் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் மனு ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை ரத்து செய்வது என்பது சென்னை அணிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.