1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 30 மார்ச் 2015 (20:46 IST)

கலைக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மீது 'ஊழல் விசாரணை'

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 

 
தலைவராக சிதத் வெத்தமுனி, செயலாளராக பிரகாஷ் ஷாப்டர், பொருளாளராக லுசில் விஜேவர்தன, துணைத் தலைவராக குஷில் குணசேகர, கபில விஜேகுணவர்தன ஆகியோர் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கின்றனர்.
 
இவர்களைத் தவிர நுஸ்கி மொஹமட், பிரசன்ன ஜயவர்தன, ஜயானந்த வர்ணவீர மற்றும் துமிந்த ஹுலன்கமுவ ஆகிய நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
 
புதிய இடைக்கால குழுவின் தலைவர் சிதத் வெத்தமுனி முன்னர் கிரிக்கெட் தெரிவாளர்கள் குழுவின் தலைவராக பணியாற்றியவர். முன்னைய இரண்டு இடைக்கால குழுக்களில் உறுப்பினராக இருந்தவர்.
 
அடுத்த மாதக் கடைசியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடக்கவிருந்தது. அதற்கிடையில் அந்த நிறுவனம் கலைக்கப்பட்டுள்ளது.
 
கடைசியாகத் தலைவராக இருந்த ஜயந்த தர்மதாஸ, செயலாளராக இருந்த நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் இடையே இம்முறைத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளில் பல தடவைகள் இடைக்கால குழுக்களின் பொறுப்பில் இருந்து வந்துள்ளது.
 
பல்வேறு ஊழல்கள், நடைமுறை ரீதியான குளறுபடிகள், அரசியல் தலையீடுகள் போன்றன இதற்கு காரணமாகக் கூறப்பட்டன.
 
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைப்பதாக இன்று அறிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த நிறுவனத்தின் மீதான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
 
'பொறியாளர் கூட்டுத்தாபனத்துக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை 500 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. கொடுக்காதுவிட்டால் நிதியமைச்சு தான் அந்தப் பணத்தை கொடுக்க நேரிடும். அதுமட்டுமல்ல, அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை முழுமையாகப் பெறாமல் சிஎஸ்என் தனியார் ஊடகத்துக்கு ஒப்பந்தத்தை ஏன் கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது' என்றார் ரணில் விக்ரமசிங்க.
 
கிரிக்கெட் மைதானங்களை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட பணம் பொறியாளர் கூட்டுத்தாபனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் கூறினார் பிரதமர்.
 
'ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த நாங்கள் இடம்கொடுத்தால் இந்த ஊழல்களை கண்டுபிடிக்கமுடியாமல் போய்விடும். ஊழல்களைக் கண்டுபிடித்த பின்னர் தேர்தலை நடத்திப்பார்ப்போம்' என்றார் ரணில் விக்ரமசிங்க.