வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 3 அக்டோபர் 2014 (20:45 IST)

வலதுசாரி இந்துக்குழுக்களின் அழுத்தங்களால் கலப்புத் திருமண ஜோடியை பிரித்தோம்: போலீஸ்

வலதுசாரி இந்துக் குழுக்களிடமிருந்து அழுத்தம் வந்ததையடுத்து இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவ ஆணுக்கும் இந்துப் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை ரத்து செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
 
பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் இந்த இளம் ஜோடி வீட்டிலிருந்து ஓடிப்போய் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டிருந்தது.
 
வலதுசாரி இந்துக்குழுக்கள் இது சம்பந்தமாக போராட்டங்கள் செய்து, அரசு கட்டிடங்களைத் தாக்குவோம் என அச்சுறுத்திய நிலையில், உள்ளூர் போலீசார் இந்த ஜோடியைத் தேடிப் பிடித்து அவர்களைப் பிரித்ததாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்துக்குழுக்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுவது அண்மைய மாதங்களில் சகஜமாகிவருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
 
பத்தொன்பது வயது இந்துப் பெண்ணுக்கும் இருபதுகளில் உள்ள கிறிஸ்தவ ஆணும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, பெண்ணின் பெற்றோர் அதை எதிர்த்து பொலீசில் புகார் கொடுத்தனர்.
 
இத்திருமணம் பற்றிய செய்தி அறிந்து அப்பகுதியிலுள்ள இந்துக்குழுக்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு கட்டிடங்களைத் தாக்குவோம் என நூற்றுக்கணக்கான இந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சுறுத்தியதை அடுத்து, திருமணத்தை ரத்து செய்து ஜோடியை பிரித்துவைப்பதுதான் பிரச்சனையைத் தீர்க்க நல்ல வழி என நினைத்து அதைச் செய்ததாக அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.
 
திருமணம் செய்த பையனை போலீசார் வெளியேற்றியதை அடுத்து, அப்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு திரும்ப மறுத்து பெண்கள் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த ஜோடி செய்தது இந்து முறைப்படியான திருமணம், இரண்டு இந்துக்கள் இடையில்தான் அப்படியான திருமணத்தை செய்ய முடியும் எனவே இந்த திருமணம் செல்லாது என போலீஸ் நடவடிக்கையை ஆதரிப்போர் சொல்கின்றனர்.
 
ஆனால் இவ்விஷயத்தில் தலையிட போலீஸுக்கு அதிகாரம் இல்லை நீதிமன்றங்கள்தான் தலையிட முடியும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.