1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : புதன், 19 நவம்பர் 2014 (16:52 IST)

“சிந்துவெளிக் குறியீடுகள் திராவிட மொழிக் குறியீடுகளே”

சிந்துச் சமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலச் சொற் குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அறிவித்துள்ளார்.


 
இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம் (Dravidian Proof of the Indus Script via Rig Veda) என்கிற தலைப்பிலான அவரது ஆய்வுக்கட்டுரையில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரியவந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
 
சிந்து சமவெளி முத்திரைகள் சொல்லும் செய்திகள், தகவல்கள், பெயர்கள், பொருள் எல்லாமே முந்தைய திராவிட மொழியின் வேர்கள் என்பதை விவரிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். பண்டைய தமிழகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான விடுபடாத தொடர்பாகவே இந்த சிந்து சமவெளி எழுத்துருக்களை தாம் உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்திருக்கலாம் எனவும் இதன் காரணமாகவே சிந்து திராவிடத்தின் நீட்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுவதாகவும் ஐராவதம் மகாதேவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இதற்குச் சான்றாக, சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளதாக தெரிவித்த ஐ. மகாதேவன், பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன் என்ற சொற்களின் மூலவடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில் ஒருங்கிணைந்த சொற்றொடர் தொடராக இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
 
வட இந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் கலந்து இந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கும் ஐராவதம் மகாதேவன், இதற்கான பல சான்றுகளை ரிக் வேதத்தில் தாம் கண்டதாகவும் கூறினார். சிந்துவெளி நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுவதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார்.
 
குறிப்பாக பாண்டியர்களின் மூதாதையர்களின் பெயர்களும் சிந்து சமவெளியின் குறியீடுகள் குறிப்புணர்த்தும் சொற்களும் ஒத்துப்போவதாக ஐராவதம் மகாதேவன் கூறினார்.
 
ரிக் வேதத்தில் வரும், “பூசன்” என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து பெறப்பட்டதாக தாம் அறிந்து கொண்டதாக தெரிவித்த அவர், இதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் என்பது முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்று விளங்குவதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், சிந்துச் சமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத் தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்ககால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம் என்றும் சிந்து சமவெளிக் குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல் தமிழில் உள்ளதாகவும் தெரிவித்தார்.