செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (19:49 IST)

விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணித்த இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜொக்கோ விடோடோ (Joko Widodo), தனது மகனின் பட்டமளிப்பு விழாவுக்காகச் சிங்கப்பூருக்குச் செல்வதற்கு விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணம் செய்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
தனது சொந்தத் தேவைக்கான பயணம் என்பதால், தனது தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல், பொது விமானத்தில் பயணித்துள்ள இந்தோனேசியாவின் புதிய அதிபர் தனது சொந்தப் பணத்திலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
எனினும், அவருடன் பாதுகாப்புக்காக சென்ற 7 காவலர்களின் செலவும் அரசினால் செலுத்தப்பட்டுள்ளது.
 
புதிய அதிபரின் இந்தச் செயற்பாடு, சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.
 
நல்லதொரு முன்னுதாரணம் என்று அவரைச் சிலர் புகழ்ந்துள்ளனர்.
 
ஆனால் மேலும் சிலரோ, மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவர் போடும் நாடகம் என்று கூறியுள்ளனர்.
 
இதே வேளை, அதிபர் விடோடோ, சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகுபவர் என்று பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.