வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (11:51 IST)

சென்னை வந்த இலங்கை சிறார் கிரிக்கெட் அணி வெளியேற்றம்

தமிழ்நாட்டில் தனியார் கிரிக்கெட் சம்மேளனம் ஒன்று ஏற்பாடு செய்த 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்த இலங்கை இளம் கிரிக்கெட் வீர்ர்கள் குழு ஒன்று, பாதுகாப்பு கவலைகளால், மீண்டும் இலங்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டது.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்றுத்தான், அவர்களை நாட்டுக்கு திரும்ப அனுப்பியுள்ளதாக இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எழுதி வந்த கடிதங்களை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை தொடர்பாக, சென்னை, புதுடில்லி மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் அஇஅதிமுகவினர் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த சூழலில் இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சம்மேளனம் என்ற தனியார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கை வீர்ர்கள் சென்னை வந்திருந்த போதே, அவர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகளால், திரும்ப அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
 
இதனிடையே, ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் வெளியான கட்டுரை விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் இன்று திங்கள்கிழமை காலை முதல் அமளி நிலவியது.
அஇஅதிமுக உறுப்பினர்கள் இன்று காலை முதல் இரண்டு அவைகளிலும், இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையை எழுப்பினார்கள். மத்திய அரசாங்கம் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், இது வரை இலங்கை அரசுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான கண்டனம் வெளியிடாததை கண்டித்தும் அவர்கள் கூச்சலிட்டனர். மேலும் அந்த சமயத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் இன்று காலை இருமுறை ஒத்திவைக்கப்பட்டன.
 
மக்களவையில் அஇஅதிமுக நாடாளுமன்றக்குழு தலைவர் தம்பிதுரையும், மாநிலங்கவையில் அக்கட்சியின் உறுப்பினர் மைத்ரேயனும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் வலுவான நடவடிக்கைக்கு கோரினார்கள்.
 
இந்த விவகாரத்தில் பதிலளித்த பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறும் போது, ராஜிய உறவுகள் தொடர்பான விவகாரங்களில் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், இருந்தப்போதும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிப்பதில் அரசுக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார்.
 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பதிலில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை நாட்டு தூதரிடம் நேரில் விளக்கம் கேட்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
இதே விஷயம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் வெளியிட்டு, சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்த்திரைப்பட துறையினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர். மேலும் இலங்கையில் நடைபெறவுள்ள ராணுவ கருத்தரங்கங்களில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.