வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (06:58 IST)

கேரளா, தமிழகம் ஊடாக இலங்கைக்குள் வரும் போதைப்பொருட்கள்'

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 40 அயிரம் முதல் 50 ஆயிரம் அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் பொதிகள்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஐநாவின் இரண்டு பிரகடனங்களில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை, அதன்படி தொடர்ந்து ஐநாவுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைமை இயக்குநர் கே. கமகே தெரிவித்தார்.
 
இதன்படி, இலங்கைக்குள் வருகின்ற வர்த்தக சரக்கு கொள்கலன்களில் தேடுதல் நடத்தும் சிறப்பு வேலைத்திட்டமொன்றை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
 
இதனிடையே, இந்திய- இலங்கை காவல்துறைகளின் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளிடையே அண்மையில் புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
 
இலங்கையின் வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் டிஐஜி பூஜித் ஜயசுந்தர, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தின் இயக்குநர் எஸ்எஸ்பி கமல் சில்வா ஆகிய அதிகாரிகள், இந்திய போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைவர்களையும் தென்னிந்தியப் பிராந்தியத் தலைவர்களையும் சந்தித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
 
போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை உடனடியாகப் பரிமாறிக் கொள்வது, கடல்மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்படும்போது அது தொடர்பில் இருநாட்டு அதிகாரிகளிடையே ஒத்துழைப்புகளை பரிமாறிக்கொள்வது, கடத்தல்காரர்கள் நாடு விட்டு நாடு தாவும்போது அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பது ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் இருநாட்டு அதிகாரிகளும் உடன்பாடு கண்டுள்ளனர்.
 
பாகிஸ்தானிலிருந்து தான் அதிகம் வருகின்றது
 
குறிப்பாக கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பிராந்தியங்கள் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படும்போது இருநாட்டு அதிகாரிகளும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலேயே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோகண பிபிசியிடம் கூறினார்.
 
கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தப்படும்போது தென்னிந்திய மாநிலங்கள் ஊடாகவே இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுவதாகக் கூறிய காவல்துறை பேச்சாளர், இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களில் அதிகமானவை பாகிஸ்தானிலிருந்தே வருவதாகவும் கூறினார்.
 
அதேபோல இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களும் இந்தியா ஊடாகவே வேறுநாடுகளுக்கு சென்று தலைமறைவாகி வருவதாகவும் இலங்கை காவல்துறை கூறுகின்றது.
 
வேறுநாடுகளைச் சேர்ந்த கடத்தல்காரர்களும் வேறு மார்க்கங்களில் இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பிவிட்டு இந்தியா ஊடாக இலங்கைக்குள் நுழைந்துவிடுவதாகவும் காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
 
இந்தியாவுடனான புதிய உடன்பாடுகளின் பலனாக, நேற்று சனிக்கிழமை இரவு பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரை விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு ஏதுவாக இலங்கை ஒரு இடைப்பட்ட மையமாக செயற்படுவதாகவும் சந்தேகங்கள் இருந்துவருகின்றன.
 
ஆனால், அப்படியான தகவலை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை என்று இலங்கை காவல்துறை கூறுகின்றது.
 
லைபீரியாவுக்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்த பெருந்தொகை ஹெராயின் போதைப்பொருளை 6 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.