1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (11:49 IST)

லிபியாவில் சிக்கிய இந்தியர்கள் ரமதான் முடிந்து நாடு திரும்புவார்கள்

ரமதான் மாதம் புனித ஈத் பெருநாள் முடிந்தவுடன் லிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான பணிகள் துவங்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.






மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்தியாவிற்கு திரும்ப விரும்பும் இந்தியர்கள் நாடு திரும்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்ததாகவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
 
லிபியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் லிபிய போராளிகளுக்கும் அரசாங்க படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
லிபியாவில் உள்நாட்டு போர் முற்றிவரும் நிலையில் அந்நாட்டில் சிக்கியிருக்கும் கேரள செவிலியர்கள் உள்ளிட்ட 65 இந்திய ஊழியர்கள் நாடு திரும்ப ஆவலாக உள்ளதாக கேரள மாநிலத்தின் வெளிநாட்டு வாழ் மக்களின் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
 
லிபியாவில் உள்ள இந்தியர்களுக்கு உதவ ஏதுவாக தொடங்கப்பட்ட கால் செண்டரில், கடந்த மூன்று நாட்களில் 120க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகவும், பல செவிலியர்கள் உட்பட பல ஊழியர்கள் இந்தியா திரும்ப விரும்புவதாகவும், வெளிநாட்டு வாழ் கேரள விவகாரத்துறை தலைமை நிர்வாக அதிகாரி பி.சுதீப் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில் லிபியாவின் திரிபோலியில் உள்ள சுமார் 4500 இந்தியர்களுடன் 62 ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் தொடர்பு வைத்துள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
லிபியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அவர்கள் அனைவரும் எதிர்காலத்தை பற்றி அஞ்சுவதாகவும், அங்கு எரிவாயு, பெட்ரோல் ஆகியவற்றிற்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
வன்முறை அதிகரித்து வரும் திரிபோலி மற்றும் பெங்காசி ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கைகள் ரமதான் மாத புனித ஈத் பெருநாள் முடிந்தவுடன் துவங்கப்படும் என்றும் கேரள மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
லிபியாவில் சிக்கியுள்ள செவிலியர்கள்
 
லிபியாவின் பெங்காசி பகுதியில் சிக்கியுள்ள செவிலியர்கள் பணிக்கு செல்ல ஏதுவாக பாதுகாப்பான வாகனங்கள் அனுப்பப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ள செவிலியர் லிஸி யோகானந்த், அங்கு வீட்டு பொருட்கள் வாங்க வெளியே செல்ல பாதுகாப்பு இல்லை என்றும், சமயல் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
பெங்காசியின் சத்ரி பகுதியில் உள்ள ஜெமரியா மருத்துவமனையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 35 செவிலியர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை சமர்பித்துவிட்டதாகவும், மருத்துவமனை சார்பிலான இறுதி உடன்படிக்கைகளுக்கு காத்திருப்பதாகவும் செவிலியர் லிஸி தெரிவித்துள்ளார்.
 
எனினும் அந்த மருத்துவமனையின் நிர்வாகம் மூன்று மாத நோட்டீஸ் அளிக்குமாறு கோருவதாகவும், மூன்று மாத காலத்திற்கு பிறகே பணியிலிருந்து முறையாக விடுவிக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே உடனே இந்தியா திரும்ப வேண்டுமென்றால் லிபியா மருத்துவமனையில் பணிபுரிந்ததற்கான சான்றிதழ்கள், நிலுவை நிதி தொகைகள் உள்ளிட்டவை தங்களுக்கு கிட்டாமல் போய்விடுமோ என்று தாங்கள் அஞ்சுவதாகவும், செவிலியர் லிஸி தெரிவித்துள்ளார். அங்குள்ள செவிலியர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.