வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (08:29 IST)

முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு, செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா மீதான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு, 2014 ஆகஸ்டு 21 அன்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை வருமான வரித் துறையுடன் பேசித் தீர்த்துக்கொள்வதற்காக மனுச் செய்யப்பட்டிருப்பதால், அதன் மீது முடிவு தெரியும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரப்பட்டது.
 
அப்போது வருமான வரித் துறையின் சிறப்பு வழக்கறிஞர் ராமசாமி, வருமான வரித் துறையில் தாக்கல்செய்யப்பட்டிருக்கும் மனு மீதான கூட்டம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி நடக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 
முன்னதாக, இந்த வழக்கு ஜூலை 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தை வருமான வரித்துறையுடன் பேசித் தீர்ப்பதற்காக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கும் பிறகுஆகஸ்ட் 21ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
 
வழக்கின் பின்னணி
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித் துறைக்குச் சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.
 
அதற்குப் பிறகு 93-94ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனச் சசிகலா மீதும் 1997இல் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. அதே போல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997இல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமான வரித் துறை.
 
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006இல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று உத்தரவிட்டது.
 
சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, 2014 ஆகஸ்டு 21 அன்று விசாரணைக்கு வந்தது.