வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2016 (10:37 IST)

மூன்று மாணவிகள் பலியான எஸ்விஎஸ் யோகா மருத்துவக் கல்லூரி எப்படி நடத்தப்பட்டது?

மூன்று மாணவிகள் பலியான எஸ்விஎஸ் யோகா மருத்துவக் கல்லூரி எப்படி நடத்தப்பட்டது?

கடந்த சனிக்கிழமையன்று (23-01-2016) தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியான மோனிஷாவின் உடலுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் இன்று வியாழக்கிழமை மறு பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது.
 

வயல்களுக்கு நடுவே மருத்துவமனை, இரு கல்லூரிகள்
 
இந்த பின்னணியில் தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் விதம் குறித்து பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.
 
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பங்காரம் என்ற இடத்தில் வயல்வெளிக்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறன சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எஸ்விஎஸ் கல்லூரிகள்.
 
ஒரே ஒரு மூன்று மாடி கட்டிடம் மட்டுமே இருக்கும் இந்தக் கல்லூரியில் ஹோமியோபதி படிப்பை வழங்கும் எஸ்விஎஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை வழங்கும் ஒரு கல்லூரியும் இயங்கிவந்துள்ளன.
 

ஒரே கட்டிடத்திற்குள் கல்லூரிகள், மாணவர் விடுதி, மருத்துவமனை என எல்லாம்
 
இவை தவிர, அந்த ஒரே கட்டிடத்தில்தான் மாணவர்களின் விடுதி, மருத்துவமனை, கல்லூரியின் வகுப்பறைகள், சோதனைச் சாலை, உரிமையாளரின் குடியிருப்பு ஆகியவையும் இருந்துவந்தன.
 
எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கல்லூரிகள் 2008ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இதில் ஹோமியோபதி படிப்பை வழங்கும் கல்லூரிக்கு ஹோமியோபதிக்கான மத்தியக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கவில்லை.
 
ஆனால், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கென அங்கீகாரம் வழங்கும் அகில இந்திய அமைப்பு ஏதும் இல்லை. ஆகவே, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி இயங்கிவந்துள்ளது.
 
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாலோசனையிலும் இந்தக் கல்லூரி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
 

அடிப்படை ஆங்கிலப் பிழைகள் மலிந்த எஸ்விஎஸ் கல்லூரி தகவல் கையேடு
 
2008ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தக் கல்லூரியில், 50 இடங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தும் முதல் ஆண்டில் 9 பேர் மட்டுமே சேர்ந்தனர். 2009ஆம் ஆண்டில் 7 பேரும் 2010ஆம் ஆண்டில் 24 பேரும் 2011ஆம் ஆண்டில் 12 பேரும் 2012ஆம் ஆண்டில் 24 பேரும் 2013ஆம் ஆண்டில் 29 பேரும் 2014ஆம் ஆண்டில் 20 பேரும் சேர்ந்தனர்.
 
பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து 2015ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த மருத்துவப் பல்கலைக்கழகம் தடைவிதித்தது.
 
துவக்கத்திலிருந்தே எந்த அடிப்படை வசதியுமின்றி இயங்கிவந்த இந்த மருத்துவக் கல்லூரிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேட்டபோது, தங்களுடைய ஆய்வுக் குழுக்கள் அங்கு சோதனைக்குச் செல்லும்போது, போதுமான வசதிகள் இருந்ததாகவே காட்டப்பட்டன என இந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
அப்படியான சூழலில், இங்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
 
இதற்கிடையில், தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் பெற்றோர், தங்கள் மகள்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
 

 
இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இறந்துபோன சரண்யாவின் தந்தை ஏழுமலை, தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு தன் மகளுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்கிறார்.
 
பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரிக்கு திரும்பிச் செல்லும்போது தன் மகள் மகிழ்ச்சியாகவே சென்றதாகக் கூறுகிறார் அவர். கடைசியாகப் பேசியபோது, தான் கல்லூரி விடுதிக்குச் சென்றுகொண்டிருப்பதாக சரண்யா கூறிய நிலையில், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டுமென்றும் ஏழுமலை கேள்வியெழுப்புகிறார்.
 
மாணவிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது குறித்தும் தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.
 
தற்போது கல்லூரியின் தாளாளர் வாசுகி, முதல்வர் கலாநிதி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். கல்லூரி மூடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அந்தக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்தும், பொதுவாக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் விதம் குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாகவே இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி மீது நடவடிக்கை கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கும் போராட்டம், விஷம் அருந்தும் போராட்டம் என பலவகைப் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை என்கிறார்கள் அங்கு படித்த மாணவர்கள்.
 
இந்தக் கல்லூரியில் படித்த மாணவியான கோமளா, அங்கு கல்லூரி நடத்துவதற்கான எந்த அடிப்படை வசதியுமே இருந்ததில்லை எனக் கூறுகிறார்.
 
 
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வரும்போது வேறு இடங்களிலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டும், உபகரணங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டும் எல்லா வசதிகளும் இருப்பதைப் போல காண்பிக்கப்படும் என்கிறார் கோமளா.
 
அந்தக் கல்லூரியில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் கல்லூரியின் உரிமையாளர்களுக்கான வீட்டு வேலைகளையும் தாங்களே செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டதாகவும் கோமளா கூறுகிறார்.
 
இங்கு நடந்த தேர்வுகளைப் பொறுத்தவரை, ஒரு தாளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரைக் கட்டுபவர்களுக்கு புத்தகங்களைப் பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும், பாடங்கள் ஏதும் நடத்தப்படாததால், மற்றவர்கள் தோல்வியடைவது உறுதிசெய்யப்படும் என்றும் கூறுகிறார் கோமளா.
 
இந்தக் குறிப்பிட்ட எஸ்விஎஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற விதமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. பிற கல்லூரிகளில் செவிலியர் போன்ற படிப்புகளில் சேர வரும் மாணவியரை அணுகும் எஸ்விஎஸ் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அழகிய கட்டடங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களைக் கொண்ட விவரக் குறிப்புகளைக் காட்டி, அவர்களது மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்வார்கள் என அங்கு படித்த மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கூறினர்.
 

கல்லூரி மூடப்பட்ட நிலையில் காவலுக்கு நிற்கும் போலீஸ் வாகனம்
 
அதன் பிறகு, கல்லூரிக்குச் சென்று பார்த்து உண்மை நிலையை அறியும் பெற்றோர் மாற்றுச் சான்றிதழைத் திரும்பக் கேட்டால், ஐந்தாண்டுக்கான கட்டணத்தையும் திரும்பச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறியதால், தங்கள் மகளை வேறு வழியின்றி அந்தக் கல்லூரியில் சேர்த்ததாக கோமளாவின் பெற்றோர் கூறுகின்ரனர்.
 
நர்ஸிங் போன்ற துணை மருத்துவப் படிப்புகளை வழங்கும் நூற்றுக்கணக்கான துணை மருத்துவக் கல்லூரிகள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் இயங்கிவருகின்றன. எஸ்விஎஸ் கல்லூரி விவகாரத்தையடுத்து, தமிழகத்தில் செயல்படும் பல்வேறு துணை மருத்துவக் கல்லூரிகள் செயல்படும் விதம் குறித்தும் அவற்றுக்கு அங்கீகரம் அளிக்கப்படும் விதம் குறித்தும் அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது.
 

தனியார் உயர் கல்விக்கூடங்களுக்கான எல்லா விதிகளையும் எஸ்விஎஸ் மீறியதாக புகார்
 
இம்மாதிரியான கல்லூரிகளை முறைப்படுத்த பல்வேறு விதிமுறை மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.
 
புதிதாக ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கும்போது அந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்குத் தேவையான வசதிகள் மட்டும் இருக்கின்றனவா என்று பார்க்காமல், நான்காண்டு படிப்பையும் நிறைவுசெய்வதற்கான வசதிகள் இருக்கிறதா என்பதைச் சோதிக்க வேண்டும் என்கிறார் அவர்.
 
தற்போது அந்தக் கல்லூரி மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு படித்த மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளர் ஆறுமுகம் தெரிவித்திருக்கிறார்.
 
ஆனால், தங்கள் மூன்று மகள்களைப் பறிகொடுத்த பெற்றோரோ செய்வதறியாது விரக்தியில் ஆழ்ந்திருக்கின்றனர்.