வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (20:24 IST)

மாற்றுத் திறனாளிகள் திரைப்பட விழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு

இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
 

 
மாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது.
 
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் மூளை வளர்ச்சி குறைப்பாடு கொண்டிருக்கும் சிறுவனாக பிரித்விராஜ் தாஸ் நடித்திருந்தார்.
 
இந்த ஆண்டில் நடைபெறும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் ஒரே தமிழ் மொழி திரைப்படமும் இதுதான்.
 
இவ்விழா வருடந்தோறும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் என, இந்திய அரசு, இவ்விழா தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 
டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் இந்த திரை விழா, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினமான டிசம்பர் 3 ஆம் தேதியன்று நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் இந்த முதலாவது வருட நிகழ்ச்சியில், மொத்தமாக 40 படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
அவை 10 முழுநீள திரைப்படங்கள், 16 குறும்படங்கள் மற்றும் 14 ஆவணத் திரைப்படங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து மொத்தமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்த 541 படங்களிலிருந்து, இந்த 40 படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
அத்தோடு இந்த நிகழ்ச்சியில் வகைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பிரிவுகளின் கீழும், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். அந்த பரிசுத்தொகை மூன்று லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
தனித்துவம் வாய்ந்த திரைவிழாவாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து, சிறப்பு விவாத பட்டறை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.