1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வியாழன், 6 நவம்பர் 2014 (12:47 IST)

கிரெக் சேப்பல் பற்றி சச்சின் டெண்டுல்கர் கருத்தால் சர்ச்சை

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினின் சுயசரிதை புத்தகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, ஜாகீர்கான், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோரும் சேப்பல் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.


 
‘ப்லேயிங் இட் மை வே’ (PLAYING IT MY WAY) என்ற தலைப்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் எழுதியுள்ள இந்த சுயசரிதைப் புத்தகம் வெளியாகியுள்ளது.
 
அந்தப் புத்தகத்தில் கிரேக் சேப்பலை 'சர்க்கஸ் ரிங் மாஸ்டர்' என சச்சின் குறிப்பிட்டுள்ளார். சர்க்கஸ் கூடாரத்தில் வன விலங்குகளை மேற்பார்வை செய்யும் ரிங் மாஸ்டர் போல, பயிற்சியாளர் கிரெக் சேப்பலும், கிரிக்கெட் வீரர்களின் உணர்வுகளை பொருட்ப்படுத்தாது, தனது கருத்துக்களை கிரிக்கெட் வீரர்கள் மீது திணித்தார் என்று சச்சின் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னர் அப்போதை இந்திய அணித் தலைவர் ராகுல் டிராவிட்டை வெளியேற்றி சச்சின் அணித் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று கிரெக் சேப்பல் சச்சினுக்குப் பரிந்துரைத்தாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
 
‘ஒன்றாக, நாம் இந்திய கிரிக்கெட்டை கட்டுப்படுத்தலாம்’ என்று கிரெக் சேப்பல் சச்சினிடம் கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குற்றச்சாட்டு
 
சச்சினின் சுயசரிதைப் புத்தகத்தில் சேப்பல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, கங்குலி, ஜாகீர்கான், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோரும் சேப்பல் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.
 
கிரெக் சேப்பல் இந்திய கிரிக்கெட்டை பின்னோக்கி எடுத்ததுக் கொண்டு சென்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
 
சச்சின் டெண்டுல்கர் தனது புத்தகத்தில் இந்த விவரங்களை எழுதியுள்ளதை தான் பாராட்டுவதாகவும், என்றாவது ஒரு நாள் தனது கதையை சொல்ல விரும்புவதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், ‘இரண்டு நபர்களுக்கு இடையே எந்த தனி உரையாடல் தொடர்பில் எனக்கு தெரியாது. நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
 
கிரெக் சேப்பல் மறுப்பு
 
தம்மை பற்றி கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களை, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் மறுத்துள்ளார்.
 
தான் வார்த்தை போரில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் அப்போதை இந்திய அணித் தலைவர் ராகுல் டிராவிட்டை வெளியேற்றி சச்சினை அணித் தலைவராக்கும் சிந்தனை தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.