வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: ஞாயிறு, 27 ஜூலை 2014 (12:27 IST)

கிளாஸ்கோ 2014: குறிபார்த்துச் சுடுதலில் இந்தியா முன்னிலை

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் மூன்றாவது நாள் போட்டிகளில் (ஜிஎம்டி 17.30 மணி வரையான தகவல்களின்படி) பதக்கப் பட்டியலில் 14 தங்கம் அடங்கலாக 37 பதக்கங்களுடன் தொடர்ந்தும் இங்கிலாந்தே முன்னிலை வகிக்கின்றது.
 
13 தங்கம் அடங்கலாக 40 பதக்கங்களுடன் இங்கிலாந்தை எந்தநேரத்திலும் தாண்டிச் சென்றுவிடமுடியும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த நிலையில் இருக்கின்றது ஆஸ்திரேலியா.
 
போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து 8 தங்கம் அடங்கலாக 19 பதக்கங்களை தன்வசமாக்கியுள்ளது.
 
இங்கிலாந்திடமுள்ள தங்கப் பதக்கங்களில் 6 ஜூடோ போட்டிகளில் அள்ளியது. மற்றபடி சைக்கிளோட்டம், நீச்சல், ட்ரையத்தலன் போட்டிகளிலும் குறைந்தது 2 பதக்கங்கள் அந்த அணிக்கு கிடைத்துள்ளன.
 
ஆஸ்திரேலியா நீச்சலில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. 7 தங்கப் பதக்கங்களை அந்நாடு நீச்சலில் தட்டிக்கொண்டுள்ளது.
 
நேற்று வரை நாலாவது இடத்தில் இருந்த இந்தியாவை முந்திக்கொண்டுள்ள கனடா, 7 தங்கம் அடங்கலாக 13 பதக்கங்கங்களை இதுவரை சுவீகரித்துள்ளது.
 
கனடா ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஆகக்கூடுதலாக 5 தங்கப் பதக்கங்களை கிளாஸ்கோவில் இதுவரை வென்றுள்ளது.
 
ஐந்தாவது இடத்தில் இந்தியா
 
இன்று ஐந்தாவது நிலையில் உள்ள இந்தியா மொத்தமாக 5 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 15 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது.
 
அபிநவ் பிந்த்ரா ஏர் ரைபிஃள் (10 மீட்டர்) ஆடவர் பிரிவில் நேற்று தங்கம் வென்றிருந்தார். அதேபோட்டி மகளிர் பிரிவில் அபூர்வி சண்டேலா இன்று சனிக்கிழமை தங்கம் வென்றுள்ளார்.
 
25 மீட்டர் பிஸ்டல்- மகளிர் பிரிவில் ராஹி சார்னோபாட் தங்கம் வென்றுள்ளார். அனிஸா சாவீட் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
 
குறிபார்த்து சுடுதலில் இந்தியா தான் 3 தங்கம், 4 வெள்ளி என 7 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது.
 
பளுதூக்கலிலும் இந்தியாவிடம் 2 தங்கங்கள் உள்ளன. பளுதூக்கலில் இதுவரை மொத்தம் 5 பதக்கங்கள் இந்தியா வசமாகியுள்ளன.
 
அதேநேரம் ஜூடோவில் 2 வெள்ளிகள் அடங்கலாக மொத்தமாக 3 பதக்கங்கள் இந்தியாவிடம் உள்ளன.
 
பிபிசியிடம் பேசிய இந்திய ஜூடோ சம்மேளனத்தின் தலைவர் முகேஷ் குமார், இந்திய விளையாட்டுத் துறையில் ஜூடோ, பளுதூக்கல் போன்ற போட்டிகளில் முன்னேற்றம் உள்ள போதிலும் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கே பெருநிறுவனங்களிடமிருந்து கூடுதல் ஊக்குவிப்புகள் கிடைப்பதாக வருத்தப்பட்டுக்கொண்டார்.
 
இலங்கை பதக்கப் பட்டியலில்
 
இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கை அணிக்கு தலைமை தாங்கி கிளாஸ்கோ வந்த அன்டன் சுதேஷ் பீரிஸ், 62 கிலோ எடைப்பிரிவில் நேற்றிரவு வென்ற வெள்ளிப் பதக்கத்தின் மூலம் இலங்கை கிளாஸ்கோ பதக்கப்பட்டியலில் இணைந்துகொண்டுள்ளது.
 
டில்லி காமன்வெல்த் போட்டிகளில் இவர் இதேபோட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். நேற்றிரவு தனது வெற்றிக்களிப்பை தமிழோசையுடன் பகிர்ந்துகொண்ட சுதேஷ் பீரிஸ், அடுத்த கட்டமாக ஆசிய மற்றும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று கூறினார்.
 
குழுநிலை பட்மிண்டன் போட்டிகளில் மலேசிய அணியுடன் இலங்கை அணி 5-0 என்ற அடிப்படையில் தோல்வியை தழுவியுள்ள போதிலும், புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர, இன்றை ரக்பி-7 போட்டிகளில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் 62க்கு 7 என்ற அடிப்படையிலும் இங்கிலாந்திடம் 57க்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையிலும் தோல்வியை கண்டுள்ளது. 3-வது போட்டியில் யுகாண்டா அணியுடன் இலங்கை ரக்பி அணி விளையாடுகின்றது.