வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (16:11 IST)

அலுவலகங்களில் உட்கார்ந்து வேலைபார்ப்பது ஆரோக்கியத்துக்கு கேடு

அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் என்று பிரிட்டனில் புதிய பிரச்சாரம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டு இருப்பது பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு காரணமாவதாகவும் உடற்பயிற்சி கூடத்தில் உழைப்பதன் மூலம் கூட அவற்றை சரிசெய்வது சிரமம் என்றும் On Your Feet Britain என்ற பிரிட்டிஷ் நிறுவனம் கூறுகின்றது.
 
அடிக்கடி எழுந்து நிற்குமாறும் அதிகம் நடக்குமாறும் அலுவலகத்தில் நின்றுகொண்டே கூட்டங்களை நடத்துவது அல்லது நின்றுகொண்டு வேலைபார்க்கக்கூடிய மேசைகளை வைத்திருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது.
 
அதாவது கைகால்களை அசைக்காமல் சும்மா இருப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சவால் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
இதயநோய், இரண்டாம் வகை நீரிழிவுநோய், புற்றுநோய்கள், உளநலம் பாதிக்கப்படுதல் இப்படி பல பிரச்சனைகளுக்கு உட்கார்ந்துகொண்டே வேலைபார்ப்பது காரணமாவதாக கூறப்படுகின்றது.
 
நாங்கள் தினசரி சைக்கிளில் தான் வேலைக்கு வருகிறோம், உடலை திடகாத்திரமாக வைத்திருக்கிறோம் என்று கூறுபவர்களைக் கூட நீண்டநேரம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டே வேலைபார்ப்பது பாதிக்கின்றது என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
 
தொடர்ச்சியாக உட்கார்ந்தே இருப்பதால், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை உடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பில் தாமதம் ஏற்படுகின்றது. அதனால் சர்க்கரையின் அளவுகளையும் ரத்த அழுத்தத்தையும் கொழுப்புச் சத்து துண்டுகளாக்கப்படுவதையும் உடல் கட்டுப்படுத்தும் முறையில் பாதிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.
 
Get Britain Standing மற்றும் the British Heart Foundation (BHF) ஆகிய தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து, 2000 அலுவலக பணியாளர்களிடம் நடத்திய புதிய ஆய்வில், 45 வீதமான பெண்களும் 37 வீதமான ஆண்களும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே வேலைத்தளத்தில் நிற்கின்றனர்.
 
அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் அலுவலக மேசையிலேயே பகலுணவை முடித்துக்கொள்கின்றனர்.
 
78 வீதமானவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நாளைக் கடத்துவதாக நினைக்கின்றனர். அதிலும் வேலைத்தளத்தில் அமர்ந்துகொண்டே இருப்பதால் உடலுக்கு தீங்குதான் என்று மூன்றிலிரண்டு பேருக்கு தெரிந்தே இருக்கின்றது.
 
லிஃப்டுக்குப் பதிலாக படிகளில் நடந்துசெல்வது, நாற்காலியிலிருந்து எழுந்துசென்று பகலுணவை உண்பது, ஒவ்வொரு 30 நிமிடமும் கணினி வேலையிலிருந்து சிறிது ஓய்வு எடுப்பது, தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ பேசிக்கொள்ளாமல் எழுந்துசென்று சக பணியாளர்களுடன் உரையாடுவது போன்ற சிறிசிறு மாற்றங்களின் மூலம் தொடர்ச்சியாக உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க முடியும் என்று Get Britain Standing அமைப்பைச் சேர்ந்த கவின் பிராட்லி கூறுகின்றார்.
 
அமர்ந்துகொண்டே இருப்பதிலும் பார்க்க எழுந்து நிற்பதன் மூலம் மணிக்கு 50 கலோரிகளை மேலதிகமாக எரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பிரிட்டனில் அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் எழுந்து நின்று, நடந்து திரிந்து, இதயநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுக்கவேண்டும் என்று Get Britain Standing தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.