வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (11:44 IST)

உணவுப் பாதுகாப்பு: இந்திய - அமெரிக்க இழுபறி தீர்ந்தது

உலக வணிக ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் வகையில், உணவு பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கருத்துவேறுபாடுகளை இரு நாடுகளும் சுமூகமாக தீர்த்துள்ளதாக இந்திய வணிகத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 
இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக வணிக அமைப்பின் உச்சிமாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உலக வணிக ஒப்பந்தத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காததை அடுத்து அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது.
 
இந்த ஒப்பந்தத்தில் உள்ள உணவு மானியங்கள் தொடர்பான சில விதிகள் தமக்குப் பொருந்தவில்லை என்று தெரிவித்த இந்தியா, அந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதிலிருந்து பின்வாங்கியிருந்தது.
 
இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கைக்கு உலக வணிக அமைப்பின் பொதுக்குழுவில் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று இந்திய வணிகத்துறை துணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
இந்த பாலி ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி டாலர்கள் பணத்தை உலக பொருளாதாரத்தில் சேர்க்க முடியும் என்றும் சுமார் இரண்டு கோடி தொழில்கள் உருவாகும் என்றும் சில பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
 
இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பாதுகாப்பு திட்டத்தை இந்த புதிய பாலி ஒப்பந்தம் பாதிக்கும் என்று இந்திய அரசாங்கம் முன்னதாக கவலை தெரிவித்திருந்தது.
 
இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி இந்திய அரசு, விவசாயிகளிடமிருந்து அரிசி, கோதுமை, போன்ற தானியங்களை சந்தை விலையை விட அதிக விலையில் வாங்கி அதனை ஏழை மக்களுக்கு மலிவு விலையில் அளிக்கிறது.
 
அத்துடன் எதிர்கால பற்றாக்குறையை சமாளிக்க மீதமுள்ள தானியங்களை சேமித்து பாதுகாப்பதும் இந்த திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் தமது உணவுத் திட்டம் பயனளிக்கும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் பாலி ஒப்பந்தம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு தடைகளை ஏற்படுத்தலாம் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
 
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தன. உணவு தானியங்களை சேமிப்பது உலக வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் கவலைகளை எழுப்பியிருந்தன.
 
உணவு மானியங்கள் குறித்த ஒரு தனி ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த பாலி ஒப்பந்தம் எந்த நிபந்தனைகளுமின்றி செயல்பட வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது.
 
இந்நிலையில் இந்த கோரிக்கையை அமெரிக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.