வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (14:05 IST)

சிலி நாட்டின் அடகமா பாலைவனப் பிராந்தியத்தில் திடீர் வெள்ளம்

உலகின் மிக வறண்ட பிரதேசங்களில் ஒன்றான சிலியின் அடகமா பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக, ஆயிரக் கணக்கானவர்கள் குடிநீர் மற்றும் மின்சாரமின்றித் தவித்துவருகின்றனர்.
 

 
செவ்வாய்க்கிழமையன்று ஆண்டெஸில் பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வாக இருந்த பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் நகரங்களிலும் வெள்ள நீர் புகுந்தது.
 
காபியாபோ நகரில் ஆறு கரைகளை உடைத்துச் சென்றது.
 
நிலச்சரிவு அபாயம் உருவானதால் அதிகாரிகள் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தில் கடுமையாக மழை பெய்யுமென எதிர்பார்ப்பதாகவும் சானரல் என்ற பாலைவன நகரில் நிலைமை சிக்கலானதாக இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

 
தன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்திருக்கும் அதிபர் மிச்செல் பஷெலெ, காபியாபோ செல்லவிருப்பதாகக் கூறியுள்ளார்.
 
செவ்வாய்க்கிழமையன்று மாலையில் துவங்கிய புயல் மழையின் காரணமாக, சாலைகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு வசதிகளும் பாதிக்கப்பட்டன.
 
38,000 பேர் மின்சாரமின்றியிருப்பதாகவும் 48,500 பேர் குடிக்கத் தண்ணீரின்றி இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
"அடகமா பிராந்தியத்தில் அபாயத்திற்குள்ளாகக்கூடிய பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்" என உள்துறை அமைச்சர் ரோட்ரிகோ பெனைலில்லோ கூறியிருக்கிறார்.
 
ஏற்கனவே தென்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயும் வறட்சியும் சிலி நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.