வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 5 செப்டம்பர் 2014 (20:08 IST)

புகையிலை அளவுக்கு மோசமானதல்ல இ-சிகரெட்: பிரிட்டிஷ் நிபுணர்கள்

இ-சிகரெட் எனப்படும் எலக்டிரானிக் சிகரெட்டுகள் தொடர்பாக அண்மையில் வெளியான எச்சரிக்கைகள் சற்று அளவுக்கதிகமான மிகைப்படுத்தலாகத் தெரிகின்றன என்றும், ஆனால் சிகரெட்,பீடி,சுருட்டுக்கு மாற்றாக எலக்டிரானிக் சிகரெட் புழக்கம் வருமானால், பல உயிர்கள் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை எனவும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இ-சிகரெட்டுகளை பொதுவிடங்களிலும், வேலையிடங்களிலும் புகைக்க தடை விதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் சென்றவாரம் எச்சரித்திருந்தது.

ஒரு ஆண்டில் பத்து லட்சம் பேர் இ-சிகரெட்டுக்கு மாறுகிறார்கள் என்றால், அந்த ஆண்டில் ஆறாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்படக்கூடும் என யுனிவர்சிட்டி காலெஜ் லண்டன் - யூ சி எல் ஐச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இ-சிகரெட்டுகளின் காரணமாக சில நச்சுப் பொருட்களும், நிகோட்டினும் கூடுதலான அளவில் காற்றில் கலந்து வருகின்றன என்பதால் பொது இடங்களில் இ-சிகரெட் புகைக்க தடை தேவை என உலக சுகாதார நிறுவனம் வாதிட்டிருந்தது.

புகைப் பழக்கம் இல்லாதவர்கள் கெடுதல் இல்லை என நினைத்து எலக்டிரானிக் சிகரெட்டுக்கு பழகுகிறார்கள் என்றால், பின்னாளில் அவர்கள் நிஜமான சிகரெட் பழக்கத்துக்கு ஆளாகும் நிலை உருவாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.

ஆனால் எலக்டிரானிக் சிகரெட் பயன்படுத்தபவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் அதற்கு முன்னால் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் என யூ சி எல் சுட்டிக்காட்டுகிறது.

எலக்டிரானிக் சிகரெட்டிலிருந்து வெளியேறும் ஆவியில் சில நச்சுப்பொருட்கள் இருந்தாலும் இவை மிகவும் அளவு குறைவானவை என யூ சி எல் ஐச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் வெஸ்ட் கூறுகிறார்.

புகையிலை சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் கார்சினோஜென் ரசாயனங்களோ அல்லது மோசமான நச்சுப்பொருட்களோ இ-சிகரெட்டில் இல்லை என்றும் அதில் இருக்கும் நச்சுக்பொருட்களின் அளவில் இருப்பதில் ஒரு பங்கு தான் இ-சிகரெட்டுகளில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த இ-சிகரெட்டுகள் ஓரளவுக்கு அண்மைய வரவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் 2005ஆம் ஆண்டு சீனாவில் ஒரே ஒரு நிறுவனத்தால் மட்டுமே இ-சிகரெட் தயாரிக்கப்பட்டது என்று நிலை மாறி இன்று 466 நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கின்றன. ஆயிரங் கோடி டாலர்கள் கணக்கில் தொழில்நடக்கும் ஒரு நுகர்வுப் பொருளாக இது மாறிவிட்டுள்ளது.

திரவமாக உள்ள நிகோட்டினை மின்சக்தியால் சூடாக்கி ஆவியாக மாற்றி அதை புகைப்பவர் நேரடியாக உள்ளிழுக்க வகை செய்வது எலக்டிரானிக் சிகரெட் ஆகும். இதிலிருந்து வருகின்ற புகை பெருமளவுக்கு நீராவிதான். எனவே புகையிலை சிகரெட்டை புகைப்பதைவிட பல வகைகளில் இது மேம்பட்டது.

ஆனாலும் இ-சிகரெட்டின் மூலமாகவும் ஒருவர் நிக்கோட்டினுக்கு அடிமையாகிவிடுகிறார். தவிர சில நிறுவனங்களின் இ சிகரெட்டுகளில் தடை செய்யப்பட்ட சில இரசாயனங்களும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது.

உலக சுகாதார நிறுவன எச்சரிக்கைக்கு எதிராக யுசிஎல் நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னும் பதில் அளித்திருக்கவில்லை.

இ-சிகரெட்டுகளால் உடல்நலத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி முழுமையான விவரங்கள் இல்லாத நிலையில் மாறுபட்ட அபிப்பிராயங்களும் அறிவுறுத்தல்களும் வருமென்பதில் ஆச்சரியமில்லை.