1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 17 டிசம்பர் 2014 (13:49 IST)

தமிழக சிறுமி படுகொலையில் சந்தேகங்கள்

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முட்புதர் ஒன்றில் 11 வயது மாணவி ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 
குடியாத்தத்திற்கு அருகில் உள்ள காங்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர், நேற்று வழக்கம்போல பள்ளிக்கூடத்திற்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், இன்றுகாலையில், கல்யாண பெருங்குப்பம் என்ற பகுதியில் முட்புதர்களுக்கு இடையில் அவரது பள்ளிக்கூடத்துப் பை மற்றும் புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குஅருகிலேயே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
 
அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புப் படித்து வரும் இந்த மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக, மாணவி படித்த பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
 
மருத்துவ அறிக்கையின்படி ஒருவர் மட்டுமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இந்த மாணவரைத் தேடி காவல்துறையின் ஒரு அணியினர் பெங்களூருக்கும் மற்றொரு அணியினர் சென்னைக்கும் சென்றிருப்பதாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இந்தச் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக, சுரண்டப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் சமூகத்தில் இருப்பதும் ஆண் குழந்தைகளுக்கு போதுமான வழிகாட்டல் இல்லாமல் இருப்பதுமே இம்மாதிரி சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்கிறார் குழந்தைகள் உரிமைக்கான தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன்.
 
சக மாணவர் ஒருவரே இந்த வழக்கில் தேடப்படும் நிலையில், சமூகம்தான் குழந்தைகளுக்கு வன்முறையைக் கற்றுக்கொடுக்கிறது என்கிறார் அவர். 2012ஆம் ஆண்டில் தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்ட அதே தினத்தில் தமிழகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 
தில்லியில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, பாலியல் பலாத்கார சம்பவங்களை குறைக்க, அதில் ஈடுபடுவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைத்தல், ரசாயன முறையில் ஆண்மை நீக்கம், மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.
 
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு எதிராக 74 வன்முறை சம்பவங்கள் ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.