வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (20:43 IST)

தமிழக மழை: பலியானோர் எண்ணிக்கை 100ஐத் தாண்டும்?

சென்னையில் மழையின் சீற்றம் குறைந்துள்ள போதும், தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளது.


 

 
தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 80 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலரை காணவில்லை என மக்கள் கூறி வருகின்றனர்.
 
வெள்ளப்பெருக்கின் காரணாமாக நோய்கள் பல பரவுவதற்கான அபாயமும் உருவாகியுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகரில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கின்றன. ஏற்கனவே செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருந்த காரணத்தால், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து அந்த இரு ஏரிகளிலிருந்தும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில் போரூர் எரியும் இன்று புதனன்று நிரம்பியுள்ளதால், எந்நேரமும் ஏரியிலிருந்து நீர் வெளியாகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். சென்னையின் வெள்ளப் பகுதிகளில் மீட்பு மற்றும் மருத்துவ குழுவினர் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
இருந்தபோதும் அப்பணிகள் முழுமை பெற மேலும் கால அவகாசம் தேவைப்படும் என கூறப்படுகிறது.
 
இதற்கிடையே சென்னைக்கு வர வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் வரத்து குறைந்துள்ள காரணத்தால், பொருட்களின் விலைகள் உயர்ந்து காணப்படுகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்கறி, பால் போன்ற பொருட்கள் அதிக விலைக்கு மட்டும் விற்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோடு முக்கிய தேவைகளுக்காக அதிக தூரம் பயணிக்க வேண்டி உள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய பெரும்பாலான ரயில்கள் இன்று ரத்தாகியுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும் போதுமான வசதி செய்யப்படவில்லை என அவர்கள் குறை கூறினர்.


 

 
தமிழக அரசு எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
 
வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் திமுக சார்பில் அளிக்கப்படும் என கூறிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு அதிக நிதி கோர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாவட்டவாரியாக, அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து, நிவாரண நிதிகளை நேரடியாக மக்களிடம் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
 
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) போன்ற பகுதிகளில் உள்ள கல்லூரி வளாகத்தில் நீர் சூழ்ந்துள்ள காரணத்தால், மாணவ விடுதிகளில் சிக்கியுள்ள மாணவர்களை படகு மூலமாக மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


 
 
சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22ஆம் தேதிவரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
 
23ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் கல்வி நிலையங்கள் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
அடுத்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் மிக பெரிய கனமழை பெய்யும் வாய்ப்பு இல்லையென சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.