வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: புதன், 15 அக்டோபர் 2014 (17:17 IST)

ஹூத்ஹூத் : ஆந்திரத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடி அறிவிப்பு

ஹுத்ஹுத் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு, உடனடியாக 1000 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர மாநில முதல்வருடன் இன்று விமானம் மூலம் மோடி பார்வையிட்டார்.

 
புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கைத் திரும்பத் தொடங்கியிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
 
ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஆந்திராவின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாகக் குடிநீர் லிட்டர் 250 ரூபாய்க்கும், அரை லிட்டர் பால் ரூபாய் 60 வரை விற்கப்படுவதாகவும், அதைப் போல் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட மற்ற மிக முக்கிய அத்தியாவசிய பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விலை ஏற்றம் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.
 
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, புயலினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சமும், காயமுற்றோருக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
 
இம்முறை உயர்தொழில்நுட்ப உதவியுடனான எச்சரிக்கைகள் சரியான முறையில் தொடர்ந்து கிடைக்கப் பெற்றதால், பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் மோடி அப்போது குறிப்பிட்டார்.
 
இந்தப் புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள சூழலில், இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கக் கூடும் எனும் அச்சங்களும் எழுந்துள்ளன.
 
இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஒருங்கிணைப்போடு செயல்படாத அத்தகைய அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக அனைத்துப் பணிகளும் தடைப்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
விசாகப்பட்டினத்தின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் பெரிய அளவில் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதால் இன்றும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஒரு சில ரயில் சேவைகள் மட்டும் பிற்பகலுக்கு மேல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் விமான சேவை தொடங்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.