வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (21:44 IST)

கிரீன்பீஸ் நிறுவனம் மீது தமிழக அரசு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை

க்ரீன் பீஸ் இந்தியாவின் பதிவை தமிழக அரசு ரத்து செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
 

 
சுற்றுச்சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனமான கிரீன் பீஸ் இந்தியா, சென்னையில் பதிவு அலுவலகத்தைக் கொண்ட ஒரு சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இந்த அமைப்பு பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
 
அந்த நோட்டீஸில், நெதர்லாந்தில் உள்ள கிரீன்பீஸ் கவுன்சிலின் ஆணைப்படியே இங்கிருக்கும் அமைப்பு செயல்படுவதாகவும் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுவருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
 
அந்த நிதி குறித்த கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்கும்போது 2005-06ஆம் ஆண்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டு வரையிலான கணக்குகளில் முரண்பாடுகள் இருந்ததாகவும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
 
இதையடுத்து, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இருந்தபோதும், தாங்கள் கேட்ட விளக்கத்தை கிரீன்பீஸ் அளிக்கவில்லையென்று கூறிய தமிழக அரசு அதன் பதிவை ரத்து செய்வதாக தெரிவித்தது.
 
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய க்ரீன் பீஸ் இந்தியா அமைப்பு, தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை கோரியது.
 
இதனைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் நடவடிக்கைக்கு நான்கு வார காலத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படியும் தமிழக அரசுக்குக் கூறப்பட்டிருக்கிறது.
 
தங்களுடைய செயல்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்க முயல்வதாக க்ரீன் பீஸ் இந்தியா குற்றம்சாட்டிவருகிறது.