வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (19:12 IST)

புழல் சிறையில் காவலர்களுடன் மோதல்; 6 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

சென்னைக்கு புழல் சிறையில், காவல்துறையினருக்கும் சிறைக் கைதிகள் சிலருக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து, ஆறு கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 

 
வெள்ளிக்கிழமையன்று மாலையில், புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் சிலருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
 
இதில் காவல்துறையைச் சேர்ந்த ஐந்து பேர் தாக்கப்பட்டனர். துணை ஜெயிலர் உட்பட இருவரைக் கைதிகள் பிடித்து வைத்துக்கொண்டனர்.
 
இதையடுத்து, காவல்துறை உயரதிகாரிகள் கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த இரு காவலர்களையும் மீட்டனர்.
 
குறிப்பிட்ட ஜெயலர் கைதிகளிடம் மிக கண்டிப்பாக இருந்த காரணத்தாலேயே அவர் தாக்கப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய புழல் சிறையின் டிஐஜி (பொறுப்பு) எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார்.
 
ஏற்கனவே இந்த குறிப்பிட்ட கைதிகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர். நேற்று மாலையில், சிறைக் கைதிகள் தங்கள் அறைகளில் பூட்டப்படுவதற்கு முன்பாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு கைதிகள் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.