வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (20:09 IST)

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: தொடரும் போராட்டங்கள், தீவைப்பு - என்ன நடக்கிறது அசாமில்?

இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அசாமில் நிலைமை மோசமாகி வருகிறது.

அசாமின் பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெளஹாத்தி உள்ளிட்ட பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்துக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அசாமில் உள்ள டின்சுகியாவில் உள்ள பனிடோலா ரயில் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது.
 
அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, "யாரும் உங்களின் உரிமைகளை பறிக்க முடியாது. உங்கள் அடையாளம் மற்றும் அழகான கலாசாரத்தை யாரும் எடுக்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா தொடர்பாக அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அசாமின் திப்ரூகார் நகரத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சர்பானந்த சொனோவல் வீட்டில் போராட்டக்காரர்கள் கற்களை எறிந்து போராட்டம் செய்தனர்.

அசாம் மக்களின் எதிர்ப்புக்கு காரணம் என்ன?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றிய மத்திய அரசு, இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை அசாமை பூர்விகமாக கொண்டவர்கள் எதிர்ப்பதற்கு வேறுபட்ட காரணம் உள்ளது.

1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் அன்றைய காலம் முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, 1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தே சிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று அதன் இறுதிப்பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் நினைத்த நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மக்கள் மனநிலை என்ன?

இது தொடர்பாக அனைத்து அசாம் கோர்க்கா மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பிரேம் தமாங் கூறுகையில், இந்த போராட்டம் ஒரு பெரும் இயக்கமாக மாறியுள்ளது என்றும், அசாம் மக்களின் கலாசாரம் மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் இவ்வாறு போராடுவதாகவும் கூறினார்.

அசாம் மாநில மக்களுக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் இருப்பதாகவும், தற்போது வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தாங்கள் எங்கு செல்வோம் என்று கேள்வி எழுப்புகிறார்.