வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 30 மார்ச் 2015 (22:08 IST)

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

முல்லைப் பெரியாறு அணைக்கு, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க, உச்ச நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியிருக்கிறது.
 

 
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கள்கிழமை, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக நடைபெற்ற போது தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அந்த அமர்வு இந்த வழக்கு மீதான விசாரணையை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைத்தது.
 
கடந்த வாரம் தமிழக அரசின் மனுவுக்கு கேரள அரசு தரப்பு பதிலளிக்கையில், அணையின் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாகினால், அது கேரள மாநிலத்தின் மக்களைத்தான் பாதிக்கும் என்பதால் தாங்கள் பொறுப்புடன் பணிகளை மேற்கொண்டு வருதாக கூறியிருந்தார்கள்.
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடு இன்னமும் கேரள மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு அத்துமீறல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறி, தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறது.
 
முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அதன் கொள்ளளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியிடப்பட்டும், கேரள அரசு புதிய சட்டத்தை வகுத்து அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பின்னர் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் தீர்ப்பில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக இது போன்ற புதிய சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்றுவது தவறு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்தோடு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை உறுதி செய்ய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நீதிமன்றம் அப்போது அமைத்ததும் கவனிக்கத்தக்கது.