1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஜனவரி 2015 (06:25 IST)

சீனப் படகு விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

கிழக்கு சீனாவில் ஓடும் யாங்சே நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.



ஜியாங்ஸு மாகாணத்தில் ஜாங்ஜியாகாங் என்ற பகுதிக்கு அருகில் சில பரிசோதனைகளை இந்தப் படகு மேற்கொண்டிருந்தபோது, வியாழக்கிழமையன்று இந்த விபத்து நேரிட்டது. அப்போது இந்தப் படகில் 25 பேர் இருந்தனர்.
 
விபத்து நேரிட்டபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு பேர், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த இருவர், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் என வெளிநாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேரும் படகில் இருந்தனர்.
 
படகில் இருந்தவர்களில் மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் 22 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
மீட்கப்பட்ட மூவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
30 மீட்டர் நீளம் கொண்ட, வாங்ஷென்ஷு 67 என்ற இந்தப் படகு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. விபத்து நிகழ்ந்தபோது, படகில் அதன் உரிமையாளரும் சில பொறியாளர்களும் இருந்தனர்.
 
வெள்ளிக்கிழமையன்று மீட்கப்பட்ட வாங் ஷென்ஹுவா என்பவர், பிரதான எஞ்சினை சோதனை செய்து கொண்டிருந்தபோது, படகு திடீரென தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிவித்தார்.
 
இதையடுத்து, 20 வினாடிகளில் ஓட்டுனர் அறை முழுவதும் நீரால் நிரம்பிவிட்டதாக அவர் கூறினார். அங்கிருந்த ஹைட்ராலிக் பம்பை பிடித்துக்கொண்டு தான் உயிர் தப்பியதாகவும் இவர் கூறினார்.
 
ஜப்பானைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரையும் தான் பிடித்துக்கொள்ள முயன்றதாகவும், ஆனால், படகு மேலும் மேலும் மூழ்கவே அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் வாங் கூறினார்.
 
இந்தப் படகு கடந்த அக்டோபரில் சீனாவில் கட்டப்பட்டது. இந்தப் படகு எங்கே செல்லவிருக்கிறது, என்ன செய்யப்போகிறது என்ற விவரங்களை துறைமுக அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கவில்லையென உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.