செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (21:23 IST)

அமெரிக்காவில் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்

பல ஆண்டுகள் சித்ரவதை செய்தும், பட்டினி போட்டும் வளர்த்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ள நிலையில், அந்தக் கலிஃபோர்னியத் தம்பதியரின் குழந்தைகள் பெற்றோரை மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளர்.
பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும், தங்களின் தாயையும், தந்தையையும் இன்னும் நேசிப்பதாக டேவிட் மற்றும் லூயிசி டர்பின் ஆகியோரின் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
 
2018ம் ஆண்டு பெரிஸிலுள்ள அழுக்கடைந்த வீட்டில் இருந்து 17 வயதான மகள் ஒருவர் தப்பியபின், இந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
 
ஒன்பது ஆண்டுகளாக தங்களின் 13 குழந்தைகளில் ஒருவரை தவிர ஏனையவரை குறைந்தது மேசமாக நடத்தியதை இந்த தம்பதியர் ஒப்புக்கொண்டனர்.
 
25 ஆண்டுகளுக்கு பின்னர் பிணை வழங்கப்படாமல் இருந்தால், இந்த தம்பதியர் தங்களின் வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
 
வெள்ளிக்கிழமை விசாரணையில், தங்களின் நான்கு குழந்தைகளின் அளித்த வாக்குமூலங்களை கேட்டபோது, இந்த தம்பதியர் அழுதனர்.
 
 
"நான் எனது அப்பா, அம்மாவை பெரிதும் நேசிக்கிறேன்" என்று ஒரு குழந்தை எழுதியதை அவரது சகோதரர் நீதிமன்றத்தில் வாசித்தார்.
 
"எங்களை வளர்த்த முறை சிறந்ததாக இல்லாவிட்டாலும், இன்று நான் இருக்கின்ற மனிதராக உருவாகுவதற்கு இந்த முறை காரணமானதால், மகிழ்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
 
அவரது மற்றொரு சகோதரர் தனது கொடுமையான அனுபவத்தால் பெரும் துன்பமடைந்ததாக தெரிவித்தார்.
 
"வளரும்போது நான் அனுபவித்ததை என்னால் விவரிக்க முடியவில்லை. அது கடந்த காலம். இப்போது நிகழ்காலம். நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் எனக்கு செய்ததை நான் மன்னித்துவிட்டேன்" என்று அவர் கூறினார்.
 
ஆனால், எல்லா குழந்தைகளும் இத்தகைய மனநிலையை பெற்றிருக்கவில்லை.
 
"எனது பெற்றோர் எனது வாழ்க்கை முழுவதையும் வாழவிடவில்லை. ஆனால், இப்போது எனது வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகிறேன்" என்று மகள் ஒருவர் கூறினார்.
 
தங்களின் குழந்தைகளை நடத்திய விதத்திற்காக மன்னிப்பு கோரிய இந்த தம்பதியர் நீதிமன்றத்தில் அழுதுவிட்டனர்.
 
"வீட்டில் அடைத்து வைத்ததும், ஒழுக்கம் கற்பித்ததும் நல்ல நோக்கங்களையே கொண்டிருந்தன. எனது குழந்தைகளை காயப்படுத்த வேண்டுமென இதனை செய்யவில்லை. நான் எனது குழந்தைகளை நேசிக்கிறேன். எனது குழந்தைகளும் என்னை நேசிப்பதாக நம்புகிறேன்" என்று 57 வயதான தந்தை எழுதியதை, அவரது வழக்கறிஞர் வாசித்தார்.
 
நீதிமன்றத்தில் பேசியபோது, தனது குழந்தைகளுக்கு செய்த செயல்களுக்காக தான் மிகவும் வருந்துவதாக லூயிசி டர்பின் கூறினார்.