வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (09:43 IST)

சென்னையிலும் 'கிஸ் ஆஃப் லவ்'- அன்பு முத்தப் போராட்டம்

கலாசார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் தற்போது நடந்துவரும் "கிஸ் ஆஃப் லவ்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்றை சென்னையில் உள்ள மத்திய அரசின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான ஐஐடியின் மாணவர்கள் நடத்தியுள்ளனர்.


 
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். நாடு முழுவதும் பரவிவரும் கலாசார கண்காணிப்புக்கு எதிராக இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக அதில் பங்கெடுத்தவர்கள் கூறினர். பின்னர் சில மாணர்கள் கிடார் இசைத்துப் பாடினர்.
 
அதன் பின்னர், சில மாணவர்கள் சக மாணவர்களைக் கட்டியணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். சில மாணவர்கள் முத்தமிட்டுக்கொண்டனர்.
 
ஆனால், வேறு சில மாணவர்கள் ஐஐடிக்குள் இந்த நிகழ்வை நடத்துவதற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி ஆகியவற்றில் மாணவர்கள் இம்மாதிரி நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.
 
கேரளாவின் சிறுநகரமான கோழிக்கோட்டில் ஒரு உணவகத்தில் முறையற்ற செயல்கள் நடப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி ஒளிபரப்பியதும், அந்த உணவகத்தை சிலர் அடித்து நொறுக்கினர். அதனைக் கண்டிக்கும் வகையில், கிஸ் ஆஃப் லவ் புராடெஸ்ட் என்ற பெயரில் ஒரு இயக்கம் துவங்கப்பட்டது.
 
இதற்கென முகநூல் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று கொச்சியின் மரைன் ட்ரைவ் பகுதியில் கூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
 
குறிப்பிட்ட தினத்தன்று ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடினர். இதில் கலந்துகொண்டவர்களில் பலரைக் காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். அதற்குப் பின்னர், இந்தியா முழுவதும் இம்மாதிரி கிஸ் ஆஃப் லவ் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
 
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் முன்னெப்போதும் நடந்திராத முதல் நிகழ்வாகும்.