1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (16:48 IST)

இந்திய இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவு?

இந்தியாவில் 10 மாநிலங்களில் சில நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகையில், பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நாட்டை ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
 
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்ற உத்தரப்பிரதேச மாநிலத்திலும், அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
 
ஆனால் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்தில் பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தாலும், இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த இடைத்தேர்தலில் முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற, குஜராத் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியான வதோராவும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்ற மெய்ன்புரி மக்களவை தொகுதி, இந்தியாவில் புதியதாக தோன்றியுள்ள தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வர் சந்திரசேகரராவ், முன்னதாக வெற்றி பெற்ற மேடக் மக்களவை தொகுதி ஆகியவற்றிலும் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை வந்து கொண்டிருக்கும் தகவல்கள் படி, அந்தத் தொகுதிகளில் அந்தந்த ஆளும் கட்சிகளே முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
 
ஆனால், எந்தத் தொகுதி முடிவுகளும் இதுவரை தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.