வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (12:43 IST)

தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டுபிடிப்பு

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் அரிய புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 

 
முழுமையடையாமல் உள்ள இந்தச் சிலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என இதைக் கண்டுபிடித்துள்ள தொல்லியல் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.
 
தமது ஆய்வு மையம் பாண்டிய நாடு முழுவதும் செய்துவரும் ஆய்வின் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகிலுள்ள ரோசல்பட்டி பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போதே இந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர். சாந்தலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
அந்தப் பகுதியில் பௌத்தச் சின்னம் ஒன்று கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார் அவர். இந்தச் சிலை எந்த அளவுக்கு பாண்டிய நாட்டுப் பகுதியில் பௌத்தம் தழைத்திருந்தது என்பதை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
 
அந்தப் பகுதியில் கிடைத்த இதர தொல்லியல் தடயங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த புத்தர் சிலை கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தாங்கள் கணக்கிட்டுள்ளதக டாக்டர். சாந்தலிங்கம் தெரிவித்தார்.
 
கருங்கல்லால் செய்யப்பட்டுள்ள அந்தச் சிலையில், வலது பக்க கன்னத்தில் செதுக்கும்போது சிறிது சிதிறியதால், பின்னமான சிலையை முடிக்காமலும், வழிபாட்டுக்கு பயன்படுத்தாமலும் இருந்துள்ளார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
 
தற்போது அந்தச் சிலை யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், நத்தத்திமேடு எனும் புறம்போக்கு இடத்தில் இருக்கிறது எனத் தெரிவித்தார் டாக்டர்.சாந்தலிங்கம்.