வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2015 (21:41 IST)

பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மரணம்

இங்கிலாந்தின் சர்ரேவில் நடந்த உள்ளூர் லீக் ஆட்டமொன்றில், மார்பில் பந்து தாக்கியதால் பாவலன் பத்மநாதன் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.
 

 
24 வயதான அந்த இளைஞர் மானிப்பாய் பாரிஷ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்காக ஆடிவந்தார்.
 
ஞாயிற்றுக்கிழமையன்று, லாங் டிட்டன் மைதானத்தில் நடந்த பிரிட்டிஷ் தமிழ் லீக் போட்டிகளில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
 
அவர் காயமடைந்தவுடனேயே ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் மரணமடைந்தார்.
 
"அவருக்கு அடிபட்டவுடன், எப்படி இருக்கிறாய் என்று கேட்டபோது நெஞ்சை அழுத்திப்பிடித்தபடியே, கைகளை உயர்த்திக் காண்பித்தார்" என அவருடன் விளையாடிய வீரர் ஒருவர் கொழும்பு மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
 
பிறகு, ஸ்டெம்புகளுக்குப் பின்னால் சில அடிகள் நடந்து சென்ற பாவலன் கீழே சுருண்டுவிழுந்தார்.
 
"பாவலனின் மரணத்தை அறிந்து எல்லோருமே அதிர்ந்து போயிருக்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவரை அறிந்தவர்களுக்கு எங்களது அஞ்சலிகள்" என சர்ரேவின் சீஃப் எக்ஸிக்யூட்டிவான ரிச்சர்ட் கௌல்ட் தெரிவித்துள்ளார்.
 
கடந்த நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் ஆட்டமொன்றில், கழுத்துப் பகுதியில் பந்து தாக்கியதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிப் ஹ்யூக்ஸ் மரணமடைந்தார்.