வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (15:30 IST)

பறவைகளால் பேரழிவுகளை முன்கூட்டியே உணரமுடியும்

இயற்கை பேரழிவுகள் நடப்பதற்கு முன்பே அவை குறித்து விலங்குகளால் முன்கூட்டி உணரமுடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.



தொலை தூரம் பறந்துசெல்லும் பறவைகள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த முடிவை அறிவித்திருக்கிறாரகள்.
 
கரண்ட் பயாலஜி என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
சின்னஞ் சிறிய பாடும் பறவையினங்களில் ஒன்றான பொன்னிறப் பறவைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னஸ்ஸி பிரதேசத்தில் தங்களின் முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும் கூடுகளில் இருந்து ஒரே சமயத்தில் ஒன்றாக விரைந்து வெளியேறிவிட்டன.
 
அந்த பகுதியை அடுத்தநாள் தாக்கவிருக்கும் சூறாவளியில் இருந்து தப்பும் நோக்கிலேயே இந்த பறவைகள் அங்கிருந்து பறந்து சென்றன.
அங்கிருந்து பறந்து சென்ற இந்த பறவைகள், சுமார் 700 கிலோமீட்டர் தூரம் பறந்து மெக்ஸிகோவுக்குச் சென்றன.
 
ஏப்ரல் மாதம் தென்னஸி பிரதேசத்தை புரட்டிப்போட்ட மோசமான சூறாவளி தாக்கி முடிந்த பிறகு இந்த பறவைகள் அனைத்தும் மீண்டும் தங்களின் கூடுகள் இருந்த இடத்திற்கு திரும்பி வந்தன.
 
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த பறவைகல் அனைத்தும் கொலம்பியாவில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் பறந்துவந்து முதல்நாள் தான் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து முட்டையிடுவதற்கான கூடுகட்டும் பணியை துவக்கியிருந்தன.



 
ஆனால் இவ்வளவு தூரம் பறந்து வந்திருந்த களைப்பையும் மீறி வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்து உடனடியாக வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்தன.
 
மனித காதுகளால் கேட்கமுடியாத ஒலி அலைகளின் சத்தம் கேட்டே இந்த பறவைகள் அங்கிருந்து வெளியேறியதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
 
வெறும் ஒன்பது கிராம் எடையிருக்கும் இந்த சின்னஞ்சிறு பாடும்புள்ளின வகை குருவிகளின் இந்த நுண்ணுணர் திறன் ஏற்கெனவே விஞ்ஞானிகளுக்குத் தெரியும் என்றாலும் இந்த குறிப்பிட்ட பரிசோதனையில் அந்த திறனின் முழுமையும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.