வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 5 ஏப்ரல் 2014 (15:22 IST)

பாபர் மசூதி: கோப்ராபோஸ்ட் செய்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்

1992ஆம் ஆண்டில் நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக 'கோப்ராபோஸ்ட்' இணையதளத்தில் வெளியான புலனாய்வு செய்தி தொடர்பில், இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணயத்திடம் புகார் அளித்துள்ளது.

இந்துத்துவ ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு சம்பவம், பாஜக கட்சியுடன் தொடர்புடையவர்களின் திட்டமிட்ட செயல் என்று 'கோப்ராபோஸ்ட்' இணையதளத்தின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தால் இந்தியாவில் பல கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் 2,000 திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினைக்கு பிறகு நடந்த மிக மோசமான மத வன்முறை நிகழ்வுகளில் ஒன்றாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.
 
16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த இடம், இந்துக்களின் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், அங்கு ஒரு இந்து கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் கோரியிருந்தனர்.
 
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் திங்கட்கிழமையன்று துவங்கவுள்ள இந்த நேரத்தில், இந்த அறிக்கையை 'கோப்ராபோஸ்ட்' இணையதளம் வெளியிட்டுள்ளது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
 
"நாங்கள் இது தொடர்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் எழுதியுள்ளோம். கோப்ராபோஸ்ட் இணையத்தளத்திற்கும் கடிதம் எழுதியுள்ளோம். உணர்வுபூர்வமான சம்பவமான பாபர் மசூதி இடிப்பு குறித்து தேர்தல் நேரத்தில் கோப்ராபோஸ்ட் தகவல்கள் வெளியிடுவதை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமைதியாக நடைபெற வேண்டிய நாடாளுமன்ற தேர்தல் மத வன்முறையால் பாதிக்கப்படும்.’ என இது தொடர்பில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
 
இந்த மசூதி இடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசமான செயல் என்றும், இதை திட்டமிட்டது பாஜக கட்சியுடன் தொடர்புடைய இந்து மதக் குழுக்களான ‘விஸ்வ இந்து பரிஷத்’ மற்றும் ‘சிவசேனா’ ஆகிய அமைப்புகள் என்றும் அந்த கோப்ராபோஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 23 தலைவர்களிடம் பேட்டிகளை எடுத்ததாகவும், சந்தேகத்துக்கு இடமின்றி இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமல்லாமல் முன்னாள் இந்திய பிரதமர் காங்கிரஸ் தலைவர் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் பாஜக தலைவர் கல்யாண் சிங் ஆகியோருக்கும் இந்த திட்டத்தில் பங்கு இருந்ததாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து அந்த இரண்டு இந்து குழுக்களும், கல்யாண் சிங்கும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.