வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (07:13 IST)

அகதிகள் சர்ச்சைக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அமைச்சர் இலங்கை வருகை

ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார்.

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் வருபவர்களை ஆஸ்திரேலிய அரசு சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையிடமே திரும்ப கையளிப்பதாக ஐநா மனித உரிமை கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆஸ்திரேலிய அரசை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன.
 
இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் இலங்கைக்கு வந்திருப்பதும், ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடல்ரோந்துக்கான நவீன படகுகளை இலங்கை அரசிடம் கையளித்திருப்பதும் சர்ச்சையை தோற்றுவிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
 
ஆஸ்திரேலிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த படகுகளை இலங்கை அரசுக்கு கையளிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலருமான கோதாபய ராஜபக்ஷவும், கடற்படை உயர் அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்காட் மோரிசன்னும் கலந்துகொண்டனர்.
 
இந்த இரண்டு படகுகளுக்கும் இலங்கை அரசி ரத்னதீப, நிஹிகத என்று பெயர் சூட்டியிருக்கிறது.
 
 
கடந்த இரண்டுவாரங்களாக இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இரண்டு வெவ்வேறு படகுகளில் ஆஸ்திரேலியாவிடம் அகதித்தஞ்சம் கோரச்சென்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தன.
 
இலங்கையில் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு படகிலிருந்த, 41 பேரை (இதில் 37 பேர் சிங்களவர்கள்) வெளியுலகுக்குத் தெரியாமலேயே இலங்கை கடற்படையிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்திருந்தனர்.
 
மற்றொரு படகில் வந்த 153 இலங்கையரை ஆஸ்திரேலியா கடற்படையினர் இடைமறித்து அவர்களை ஆஸ்திரேலிய கடற்படையின் கலனில் தற்போது தடுத்து வைத்திருப்பதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இப்படி தடுத்துவைக்கப்பட்டுள்ள 153 பேரையும் இலங்கைக்கு அனுப்பவிடாமல் தடுக்க அகதிகளுக்கான செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை அணுகியதைத்தொடர்ந்து, இந்த அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அத்துடன் இவர்கள் அனைவருக்கும் மூன்றுநாட்கள் முன் அறிவிப்பு கொடுத்த பிறகே அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவோம் என்றும் ஆஸ்திரேலிய அரசு நீதிமன்றத்திடம் உறுதியளித்திருக்கிறது.