வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (19:28 IST)

ஆஸ்த்மா மருந்து குழந்தைகளின் உயரத்தைக் குறைக்கும்

ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்ட குழந்கைளில் இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆஸ்த்மா மருந்து கொடுக்கப்பட்டால், அந்த மருந்து அவர்கள் வளர்ந்து பெரியவராகும்போது அவர்களின் உடல் உயரத்தை குறைக்கிறது என பூர்வாங்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.


 

 
பின்லாந்தை சேர்ந்த 12000 குழந்தைகள் மத்தியில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐசிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் தொடந்து கொடுக்கப்பட்ட பிள்ளைகள், பிற்காலத்தில் உயரம் குன்றியிருந்தது கண்டறியப்பட்டது.
 
இது குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் இந்த மருந்துகள் குழந்தைகளின் உயரத்தை ஒடுக்கும் என்று குறிப்புணர்த்தியிருந்தது. பள்ளி செல்லும் வயதுக்கும் குறைவான சிறார்களுக்கு ஸ்டீரொய்ட்டு மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


 

 
அதேசமயம், ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் ஆஸ்த்மா நோயின் அறிகுறிகளையும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், சிறு குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் மட்டுப்படுத்துகிறது என்றும் ஆஸ்த்மா யு கே என்ற ஆஸ்த்மாவுக்கான அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பிரிட்டனில் உள்ள சிறுவர்களில் 11 பேரில் ஒருவர் ஆஸ்த்மாவால் அவதியுறுவதாகவும்; இதுவே சிறுவர்கள் மத்தியில் உள்ள பொதுவான நாள்பட்ட சுகயீனமாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் நிவாரணிகளாக உள் நுகரப்படும் மருந்துகளில் ஆஸ்த்மாவிற்கு பயன்படுத்தப்படும் ஐசிஎஸ் என்ற மருந்தே வலுவானது என்றாலும் அந்த மருந்து சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஆஸ்த்மாவிற்காக இந்த மருந்தை பாவிக்கும் பிள்ளைகளின் வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் வருடாந்தம் அவர்களது உயரத்தையும் எடையையும் கண்காணித்து வர வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
தற்போதைய ஆய்வை மேற்கொண்ட மருத்துவக் குழுவுக்குத் தலைமை வகித்த கிழக்கு ஃபின்லாந்துப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மருத்துவர் அன்டி சாரி தமது ஆய்வு குறித்துக் கூறுகையில், குழந்தையின் எதிர்பார்க்கப்படும் உயரத்தை கணிக்க தமது குழு கடைபிடித்த வழிமுறைகளை பின்வருமாறு விளக்கினார்.
 
குழந்தைகளின் பெற்றோரின் உயரம் மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்...
                                                                                                             மேலும் படிக்க அடுத்தப் பக்கம் பார்க்க.......

ஆஸ்த்துமா மருந்து ஆகியவை குறித்த தரவுகளை வைத்து ஒரு குழந்தை வளரவேண்டிய உயரம் என்ன என்பதை தாங்கள் கணக்கிட்டதாக அவர் தெரிவித்தார்.
 
ஒரு குழந்தை ஆஸ்த்துமாவிற்கான இந்த மருந்தை நிரந்தரமாக பாவித்து வந்தால் அது அதன் உயரத்தை பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக கூறும் அண்டி சாரி, சராசரியாக ஒரு குழந்தை பிற்காலத்தில் அது முழு வளர்ச்சி அடையும் போது நியாயமாக அடைந்திருக்க வேண்டிய உயரத்தில் 3 சென்டி மீட்டர் குறைவான வளர்ச்சியையே அடைந்திருக்கும் என தெரிவித்தார்.


 

 
எனவே இந்த சிறிய வயதில் இந்த குழந்தைகளுக்கு இத்தகைய ஸ்டீராய்ட் மருந்துகள் உண்மையிலேயே மிகவும் அவசியமானவைதானா என்பதை அந்த குழந்தைகளை கையாளும் மருத்துவர்கள் ஒன்றிற்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் சிறு பராயத்துப் பிள்ளைகளை கையாள்வதும் குணப்படுத்துவதும் மிகவும் கடினமான செயல் என்று பிரிட்டிஷ் லங் பவுண்டேஷனின் மருத்துவ ஆலோசகர் ஜொனதன் கிரிக் தெரிவித்தார்.
 
பள்ளிக்கு செல்வதற்கு முந்தைய வயதுடைய குழந்தைகள் ஆஸ்த்துமாவால் பாதிக்கப்படும்போது யாருக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் அவசியம் தேவை, யாருக்கு அது தேவையில்லை என்பதை கணிப்பது மிகவும் கடினம் என்கிறார் அவர். ஏனென்றால், அனேகமான பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்கள் ஆஸ்துமாவிலிருந்து முற்றாக குணமாகிவிடுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஆஸ்த்துமாவால் ஏற்படும் ஆபத்தான் மூச்சுத்திணறலை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்த கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் அவசியமானவை என்று வலியுறுத்தும் ஆஸ்த்துமா யுகே யின் ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளுக்கான இயக்குனர் மருத்துவர் சமந்தா வோல்கர்; இதனால் ஏற்படக்கூடிய உயரக்குறைவு என்பது ஒப்பீட்டளவில் மிகச் சிறிய பாதிப்பு மட்டுமே என்கிறார்.
 
எனவே குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் இந்த மருந்தை குழந்தைகளுக்கு கொடுப்பதை பெற்றோர் நிறுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.