1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (19:08 IST)

சூனியக்காரி எனக் குற்றஞ்சாட்டி, கட்டி வைத்து அடித்தனர்: இந்திய தடகள வீராங்கனை

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் தடகள வீராங்கனை ஒருவர், கிராமவாசிகளால் தான் சூனியக்காரி என்று முத்திரை குத்தப்பட்டதால், கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர் தேப்ஜனி போரா
 
தேப்ஜனி போரா (Debajani Bora) என்ற அந்த ஈட்டி எறியும் வீராங்கனை, தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றவர்.
 
தாக்கப்பட்டதில் தனக்கு ஏற்பட்ட காயங்களின் காரணமாக எதிர்வரும் ஆசியப் போட்டியில் இந்தியா சார்பில் தன்னால் பங்கேற்க முடியாமல் போகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
போராவை தாக்கச் சொல்லி, கும்பலொன்றைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் சூனியக்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவில் ஆட்கள் துன்புறுத்தப்படுவது என்பது ஆங்காங்கே தொடர்ந்தும் நடந்து வரவே செய்கிறது. இப்படியான வன்முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்கள் உயிரிழப்பதும் உண்டு.
 
கணவனை இழந்த பெண்களை அவர்களது சொத்துக்காக இப்படியான மூட நம்பிக்கைகளைக் கிளப்பிவிட்டு இலக்கு வைப்பதென்பதும் நடந்துவருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
சம்பவம்
 
போராவின் சொந்த ஊரான கர்பி அங்குலாங் என்ற கிராமத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
 
ஒரு தற்கொலை உட்பட நான்கு பேர் அந்தக் கிராமத்தில் இறந்துவிட, யாரோ ஒருவர் சூனியம் வைத்ததால்தான் அவர்கள் இறந்திருக்கிறார்கள் எனக் கிராமத்துப் பெரியவர்கள் சந்தேகித்து கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
 
தானே சூனியம் வைத்ததாக அந்தக் கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் அடையாளங்காட்ட, தன்னை வலையில் கட்டிவைத்துக் கடுமையாக அடித்திருந்தார்கள் என போரா கூறுகிறார்.
 
மூர்ச்சையாகியிருந்த போராவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே சுய நினைவு திரும்பியிருந்தது.
 
போராவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்ததை அடுத்து கர்பி அங்குலாங் கிராமத்தில் பெண்ணொருவரைப் பொலிசார் கைது செய்திருப்பதாக அவ்வூரின் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் பழங்குடியின சமூகங்களில் பெண்களைச் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தும் சம்பவங்கள் நடப்பதுண்டு. குறிப்பாக அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகங்களில் இது அடிக்கடி நடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில், சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெரும்பாலும் பெண்களாக, கிட்டத்தட்ட 90 பேர் தலைவெட்டியோ, உயிரோடு எரித்தோ அல்லது குத்தியோ கொல்லப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று பொலிசார் கூறுகின்றனர்.