வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2015 (21:10 IST)

டில்லி கிரிக்கெட் சங்க "முறைகேடுகள்" - கெஜ்ரிவால் விசாரணைக்கு உத்தரவு

டில்லி கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
 

 
இரு டில்லி அதிகாரிகளைக் கொண்ட இந்த விசாரணைக் குழு , வரும் சனிக்கிழமை, அதாவது இரண்டு தினங்களுக்குள் விசாரணை அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டில்லி கிரிக்கெட் சங்கத்தால் சமாளிக்க முடியாத கடன் சுமை தொடர்பான விவகாரம், அர்விந்த் கேஜ்ரிவாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் டிசம்பர் 3 தேதியன்று டில்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகளுக்கு, டில்லி சங்கம் தனது தயார் நிலையை உறுதி செய்ய வேண்டும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதற்கான காலக்கெடுவை வரும் நவம்பர் 17 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கியுள்ளது.
 
இந்நிலையில் டில்லி கிரிக்கெட் சங்கம் அளிக்க வேண்டிய பொழுதுபோக்கு வரி ரூபாய் 24 கோடியை செலுத்த டில்லி அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்தே இந்த பிரச்சனை தொடர்பான விவகாரம் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே டில்லி கிரிக்கெட் சங்கத்திற்கு முன்னதாகவே அளிக்கப்பட்டிருந்த வரிச்சலுகை போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் அந்த சங்கத்தின் துணைத்தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் செத்தன் சௌகான் குறிப்பிட்டுள்ளார்.