1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (15:51 IST)

'குரங்குக் கடவுளின்' நகரத்தை தோண்டியெடுக்க ஹோண்டுராஸ் முடிவு

ஹோண்டுராஸில் பழங்கால மர்ம நகரம் இருந்ததாக சந்தேகிக்கப்படும் காட்டுப்பகுதியில் ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டேஸ் தெரிவித்துள்ளார்.
 

 
ஸ்பானிய காலனியாதிக்க காலத்தில் குரங்குக் கடவுளின் நகரம் அல்லது வெள்ளை நகரம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ஏகப்பட்ட செல்வம் குவிந்திருப்பதாக நம்பப்பட்டு, பல முறை தேடுதல் வேட்டைகளும் நடந்துள்ளன.
 
இந்த நகரத்தின் இடிபாட்டு எச்சங்கள் அவதானிக்கப்பட்டதாக பல நூற்றாண்டுகளாகவே கூறப்பட்டுவந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நகரின் தெளிவான இடிபாடுகளும் செதுக்கப்பட்ட கற்களும் கிடைத்தன.
 
2012ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப் படம் எடுக்கும் குழு ஒன்று ஹோண்டுராஸின் கரீபியக் கடற்கரைப் பகுதியில் உள்ள ரியோ பிளாடானோ உயிர்ம காப்புக்காடுகள் மீது மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் பிடித்தது. அப்போதுதான் அங்க பழங்கால நாகரீகத்தின் எச்சங்கள் இருப்பது தெரியவந்தது.
 
கடந்த அக்டோபர் மாதம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையில் இந்தக் காப்புக் காட்டின் உள்ளே செதுக்கப்பட்ட கலைப்பொருட்கள் கிடைத்ததாக கூறப்பட்டிருந்தது.
 
அந்தப் பகுதியில் நிலத்தின் அடியில் என்ன புதைந்திருக்கிறது என்பதக் கண்டறிய நிலத்தைத் தோண்டும் பணிகள் அடுத்த சில நாட்களில் துவங்கும் என்று அதிபர் ஹெர்நாண்டே ஹெர்னாண்டேஸ் தெரிவித்திருக்கிறார்.
 
ஹோண்டுராஸ் தற்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு வெகுவாக முயன்று வருகிறது. இந்தத் தருணத்தில் ஆவணப் படங்களின் மூலமாகவும் சர்வதேச இதழ்களிலும் இந்நாடு குறித்த செய்திகள் வருவதன் மூலமாக மேலும் விளம்பரம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த 'வெள்ளை நகரத்தின்' பகுதிகளில் ஹோண்டுராஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் முதற்கட்டமாக சில ஆய்வுகளைச் செய்துள்ளனர். அப்போது கலைப்பொருட்கள், மட்பாண்டங்கள், பிரமிட் போன்ற கட்டுமானங்கள் ஆகியவை கிடைத்தன.