1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (05:43 IST)

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு

முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்:
 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில், போதிய தண்ணீர் இல்லாத்தால், உச்சநீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார்.
 
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
 
‘’கர்நாடகத்தில் கடும் வறட்சி உள்ளது. போதிய மழை பெய்யவில்லை. அணைகளிலும் போதிய தண்ணீர் இல்லை. இருந்த போதிலும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு தலை வணங்கி, கனத்த இதயத்தோடு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுகிறோம். இல்லாவிட்டால் அது சட்டத்துக்கு எதிரான செயலாக அமைந்துவிடும். அதுதவிர, கர்நாடக விவசாயிகளின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்கப்படும்” என்றார் முதல்வர்.
 
கர்நாடகத்தின் நிலை குறித்து, உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம். இதுதவிர, காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகி கர்நாடகத்தின் நிலையை விளக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
“உச்சநீதிமன்றம், வாழுங்கள், வாழ விடுங்கள் என்று கூறியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏற்கெனவே தமிழகத்தக்கு 33 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். இதேபோன்றதொரு சூழ்நிலை 2013-ல் பாஜக ஆட்சியின்போது ஏற்பட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது எடுத்த அதே நிலையை தற்போதும் எடுத்துள்ளோம்” என சித்தராமய்யா தெரிவித்தார்.
 
வெளிநடப்பு:
 
இரண்டரை மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், மாநில அரசின் முடிவை எதிர்த்து, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். மாநில அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனிடையே, கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்தும், முதல்வர் சித்தராமய்யா ராஜிநாமா கோரியும், புதன்கிழமை முதல் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
 
தனது முடிவின் மூலம், கர்நாடகத்துக்கு அநீதி இழைத்துவிட்டதாக, முதல்வர் சித்தராமய்யா மீது காவிரி நலப் பாதுகாப்புக்குழுத் தலைவர் மாதே கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
 
தொடரும் போராட்டம்:
 
அதே நேரத்தில், செவ்வாய்க்கிழமையன்று, மைசூர், மாண்டியா, பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கூறி பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
 
சாலையில் மத்தியில் டயர் உள்ளிட்ட பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்பினர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு:
 
இதற்கிடையில், காவிரிப் பிரச்சினை ஏற்படும் நேரங்களில் எல்லாம், கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது வாடிக்கை. அதனால், கர்நாடக தமிழ் சங்கம், கன்னடர் - தமிழர் நல்லிணக்க அமைப்பு உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கர்நாடக உள்துறை அமைச்சரைச் சந்தித்து, தமிழர் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரினார்கள். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். அதன்படி, தமிழர் பகுதிகளில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
செவ்வாய்க்கிழமையன்று, கர்நாடகம் - தமிழகம் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரு மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
பெங்களூரில் இருந்தும் மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.