வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (18:57 IST)

பயங்கரவாத தாக்குதல் அபாயம்: அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை

உலகில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாகாக் கூறி தனது மக்களுக்கு உலகளாவிய பயண எச்சரிக்கை ஒன்றை அமெரிக்கா வழங்கியுள்ளது.


 
 
இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு, அல்கைதா, போக்கோ ஹராம் போன்ற ஆயுதக் குழுக்கள் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்த தொடர்ந்து திட்டமிட்டு வருவதாக தமக்குக் தகவல்கள் கிடைத்திருப்பதாக அந்த அறிவுறுத்தல் கூறுகிறது.
 
கூட்டமான இடங்களுக்கு செல்லும்போதும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும் பயணிகள் விழிப்போடு இருக்க வேண்டும் என அது வலியுறுத்துகிறது.

அமெரிக்க மக்கள்  குறிப்பிட்டு இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை என பிபிசியிடம் பேசிய அமெரிக்க ராஜாங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
 
வரும் வியாழனன்று அமெரிக்காவில் ஆரம்பமாகும் 'தாங்க்ஸ்கிவிங்' விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவுள்ளனர்.
 
அரிதாகத்தான் வருமென்றாலும், இதற்கு முன்னரும் இப்படியான எச்சரிக்கைகளை அமெரிக்கா வழங்கியதுண்டு என பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
 
ஆஸ்திரேலியாவில் ஓராண்டுக்கு முன் ஒரு தாக்குதல் நடந்த நேரத்தில் இப்படியான ஒரு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
 
தற்போதைய பயண எச்சரிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்குமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.