வடகொரிய அதிபர் கிம்மை திடீரென சந்திக்க அழைத்த டிரம்ப்!

Last Modified சனி, 29 ஜூன் 2019 (15:27 IST)
வட மற்றும் தென்கொரியாவை பிரிக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தன்னை சந்திக்க வடகொரிய அதிபர் கிம்முக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.
 
ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சனிக்கிழமையன்று தென் கொரிய தலைநகர் சோலுக்கு இரண்டு நாள் பயணமாக செல்லும் டிரம்ப், வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியா அணு ஆயுதங்களை கைவிடுதல் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கிம்மை சந்திக்க அழைப்பு விடுத்தார். பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து டிரம்புடன் உள்ள அதிகாரிகளுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் மற்றும் வடகொரியாவுக்கு இடையே இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு பயணம் செய்யவிருந்தார் டிரம்ப். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
 
பிப்ரவரி மாதம் வியட்நாமில் உள்ள ஹனோயில், இருநாட்டு அதிபர்களும் சந்தித்ததிலிருந்து வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை.
 
வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான இரண்டாவது பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்தது.
 
வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என அமெரிக்கா தெரிவிக்கிறது. தங்கள் நாட்டீன் மீது விதிக்கப்பட்ட தடைகளை விலக்க வேண்டும் என வடகொரியா கேட்கிறது.

இதில் மேலும் படிக்கவும் :