வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (15:22 IST)

ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் இராஜினாமா

ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
அலெக்ஸ சால்மண்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கை தோல்வியடைந்தது. 'ஒரு தலைவராக எனது காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான பிரச்சாரம் தொடரும், அந்தக் கனவு மரணித்துவிடாது' என்று அலெக்ஸ் சால்மண்ட் கூறினார்.
 
'ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் கோரிய 'யெஸ்'(ஆம்)- பிரச்சாரப் போராட்டத்தை இட்டும் எங்களின் கோரிக்கைக்கு வாக்களித்த 1.6 மில்லியன் வாக்காளர்கள் தொடர்பிலும் நான் பெருமையடைகின்றேன்' என்று எடின்பரோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் வைத்து முதலமைச்சர் சால்மண்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
வரும் நவம்பரில் நடக்கவுள்ள ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் மாநாட்டின்போது கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், அக்கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்படும் வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய தலைவர் ஒருவர் தெரிவானதும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்தார்.