வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (07:24 IST)

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வேண்டாம்: ஆப்கானிஸ்தானுக்கு கெர்ரி எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை அதிரடியாகக் கைப்பற்றும் முயற்சி ஏதும் நடந்தால், அந்நாட்டுக்கு கிடைத்துவரும் வெளிநாட்டு பாதுகாப்பு வெளிநாட்டு உதவிகள் விஷயத்தில் ஆப்கானியர்கள் கடுமையான விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.

ஆப்கானிய அதிபர் தேர்தலின் தற்காலிக முடிவுகள் வெளியான நிலையில், அந்த முடிவை தான் ஏற்கப்போவதில்லை என்றும், இணையான ஆட்சி ஒன்றை தான் அமைப்பேன் என்றும் அப்துல்லா அப்துல்லா என்ற வேட்பாளர் அறிவித்திருந்த நிலையில் கெர்ரியின் எச்சரிக்கை வந்துள்ளது.
 
டாக்டர் அஷ்ரஃப் கனி என்பவர் முன்னணியில் இருக்கிறார் நேற்றைய தற்காலிக முடிவுகள் காட்டியிருந்தன.
 
கெர்ரி எச்சரிக்கை
 
அதிகாரத்தைக் கைப்பற்ற அப்துல்லா அப்துல்லாவோ அவருடைய ஆதரவாளர்களோ முயன்றால், கடுமையான விளைவுகளை சர்வதேச சமூகத்திடமிருந்து அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதாக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரியின் எச்சரிக்கை அமைந்துள்ளது.
 
நிதி ரீதியாகவும், பாதுகாப்பு விஷயத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என அவர் கூறியிருந்தார்.
தேர்தல் முறைகேடுகள் பரவலாக நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அவை குறித்து தேர்தல் அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும் என கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.
 
அப்துல்லா நிராகரிப்பு
 
கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலின் இரண்டாவது சுற்றில், அப்துல்லா அப்துல்லாவை எதிர்த்துப் போட்டியிட்ட உலக வங்கியின் முன்னாள் பொருளாதார வல்லுநரான டாக்டர் அஷ்ரஃப் கனி பத்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தற்காலிக தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
 
ஆனால் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் முதலாவது இடத்தில் வந்திருந்த அப்துல்லா அப்துல்லாவோ, இரண்டாவது சுற்றில் இருபது லட்சம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று தான் நம்புவதாகக் கூறி  தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ளார்
அவருடைய ஆதரவாளர்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் மறுபுறம் டாக்டர் அஷ்ரஃப் கனியின் ஆதரவாளர்களோ தற்காலிக தேர்தல் முடிவுகளை ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.
 
இன ரீதியில் அரசியல் பிளவுகள் ஏற்படக்கூடிய ஆஃப்கானிஸ்தானில் சரித்திர முக்கியத்துவம் மிக்கஆட்சி மாற்றம் நடக்கக்கூடிய இத்தருணத்தில், அடுத்த சில நாட்களில் என்னனென்ன நடக்கப்போகிறது என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.