1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (18:23 IST)

சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்க அதானி குழுமத்துடன் தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் 4,536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதானி குழும நிறுவனங்கள் அமைக்கவுள்ள ஐந்து சூரிய மின் சக்தி நிலையங்களிலிருந்து 648 மெகா வாட் அளவுக்கு தமிழக மின்வாரியத்திற்கு மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் இந்தத் திட்டங்கள் அமையவுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சனிக்கிழமையன்று இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
இந்தத் திட்டம்தான் உலகிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சூரிய மின் சக்தித் திட்டம் என அதானி குழுமம் தெரிவித்திருக்கிறது.
 
தமிழ்நாட்டில் சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டில் சூரிய மின் சக்திக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது.
 
இதுவரை மொத்தம் 1084 மெகா வாட் மின்சாரத்தை சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கையெழுத்திட்டிருக்கிறது.
 
தனியாரிடமிருந்து சூரிய மின் சக்தியானது ஒரு யூனிட் 7 ரூபாய் ஒரு பைசாவுக்கு வாங்கப்படுகிறது.