வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 30 ஆகஸ்ட் 2014 (01:32 IST)

சிரியா : 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

முப்பது லட்சத்துக்கும் அதிகமான சிரியாவின் மக்கள் தற்போது அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்புக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சிரியாவின் மக்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சகாப்தத்தின் மிகப்பெரிய மனிதநேய அவசரம் இது என்று யூ என் எச் சி ஆர் விபரித்துள்ளது.
 
பெரும்பாலான அகதிகள் சிரியாவுக்கு அருகில் இருக்கும் நாடுகளுக்கு ஓடியிருக்கிறார்கள். குறிப்பாக பலர் லெபனானில் தஞ்சமடைந்துள்ளனர்.
 
கடந்த 3 வருடகால உள்நாட்டுப் போரில் சிரியாவில் 190,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
 
தனது ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வன்முறைகொண்டு அதிபர் அசாத் அவர்கள் மார்ச் 2011இல் அடக்கியது முதல் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன.
 
அண்மையில், இஸ்லாமிய அரசுக் குழுவின் உருவாக்கமும், சிரியா மற்றும் இராக்கின் பகுதிகளில் அது முன்னேறியமையும், அங்கு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
 
சிரியா மக்களில் எட்டில் ஒருவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், 65 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு கூறுகின்றது.
 
முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி இது என்று ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் தலைமை பேச்சாளரான மெல்லிசா ஃபிலமிங் கூறுகிறார்.
 
அண்டை நாடுகளுக்கு வருகின்ற மக்கள், அதிர்ச்சியில், பயத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலர் கடந்த ஒரு வருடமாக கிராமம், கிராமமாக இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள்.
 
சிரியாவுக்கு வெளியேயும் மக்கள் இடம்பெயர்வது கடினமாகி இருக்கிறது. பல இடங்களில் ஆயுதக் குழுக்களுக்கு லஞ்சம் கொடுத்தே மக்கள் தப்பி வரவேண்டியிருப்பதாக யூ என் எச் சி ஆர் கூறுகிறது.
தொடர்ச்சியான இடப்பெயர்வு காரணமாக அங்குள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
 
கல்வி இழப்பு என்பது அங்கு மிகவும் கவலைக்குரிய ஒரு விசயமாக இருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான ரொஜர் கேர்ன் பிபிசியிடம் கூறினார்.
 
சிரியாவில் இருக்கும் நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தாராளமானவைதான். ஆனால், அங்கு இருக்கும் தேவைக்கு அது போதாது என்பதுதான் இங்கு கசப்பான உண்மை.
 
சிரியாவின் பிரச்சினைக்கு தீர்வு காண, போதுமான நடவடிக்கையை எடுக்க மேற்குலகம் தவறி விட்டது என்று வியாழனன்று பிரான்ஸ் நாட்டின் அதிபரான பிரான்சுவா ஹொலந்த் குரலெழுப்பியிருந்தார். அதற்கான பிரதிபலன் தற்போது கண்கூடாகத் தெரிவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
 
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின், ''பொதுமக்களுக்கு எதிரான வன்செயல்கள்'' ஒரு புதிய மட்டத்துக்கு சென்று விட்டதாக ஐநாவின் மனித நேய நடவடிக்கைகளுக்கான துணை தலைவர் கூறியுள்ளார்.
 
தீவிரவாதிகளின் நடவடிக்கை நிவாரண நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் அசாத்துடன் சேர்ந்து மேற்கத்தைய நாடுகள் செயற்படாது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.