1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:26 IST)

2ஜி முறைகேடு வழக்கு: அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது

2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பத்து பேருக்கும் டில்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக இன்று காலை, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
83 வயதான தயாளு அம்மாளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கக் கோரிய மனுவைச் சிறப்பு நீதிபதி ஒ.பி. சைய்னி தள்ளுபடி செய்தார்.
 
இந்த வழக்கில் தயாளு அம்மாளுவுடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழி, முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா ஆகிய 9 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று பிற்பகல் தனியாக வழங்கப்பட்டது.
 
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 
இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் ரூ.200 கோடி பணம் வழங்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு அந்த 200 கோடி ரூபாய் பணத்தை அளித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.