வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. சு. பாலகிருஷ்ணன்
Written By சு. பாலகிருஷ்ணன்
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2016 (14:58 IST)

திரை நட்சத்திரங்கள் தேர்தல் பிரசாரம் வாக்குகளை பெற்றுதருமா?

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு களை கட்டத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. கட்சிகள் ஒருபுறம் கூட்டணிக்காக போராடி வரும் நிலையில் பொதுமக்கள் எண்ணமோ தனக்கு பிடித்த நடிகர்- நடிகைகள் எந்த கட்சிகளுக்கு ஆதரவு தரப்போகிறார் என்பதுதான்.


 

தேர்தலின்போது பொதுவாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக ஒரு நடிகர் நடிகைகள் பிரசாரம் செய்தால் அக்கட்சி வெற்றி பெற்றுவிடுமா என்பது கேள்விக்குறிதான், அதற்கு உதாரணம் கடந்த சட்டபேரவை தேர்தலே. கடந்த 2011 சட்டபேரவை தேர்தலின்போது நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனைக் கண்ட அரசியல் ஆர்வலர்கள் அவருக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகள்தான் என எண்ணத் தொடங்கினர். ஆனால் தேர்தல் முடிவு அதற்கு எதிர்மறையாகவே இருந்தது. திமுக படுதோல்வியையே தழுவியது. அதுமட்டுமின்றி வடிவேலுவின் திரையுலக பயணமும் தடைபட்டது. நடிகர்களுக்கு கூடும் கூட்டம் அவரை காண மட்டுமே அன்றி வாக்குகளாக மாறாது என்பது தெள்ள தெளிவாக உணர்த்தியது கடந்த சட்டபேரவை தேர்தல்.

இந்நிலையில் தமிழக சட்டபேரவை தேர்தல் மே மாதத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன. கடந்த தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் திரையுலகினர் பங்கு அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.    

அ.தி.மு.க. சார்பில் நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், செந்தில், சிங்கமுத்து, சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய தயாராகி வருகிறார்கள். தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகரர், குமரி முத்து, வாசுவிக்ரம், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு, நக்மா வாக்கு வேட்டையில் ஈடுபட உள்ளனர். பாஜகவை பொருத்தவரை நடிகர் ரஜினியின் ஆதரவை எதிர்பார்த்து வருகிறது. ஆனால் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்த ஒன்றே. தேர்தல் நெருங்கும்வேளையில் இன்னும் பல நடிகர்- நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.

திரையுலகினரின் தேர்தல் பிர்சாரம் எந்த அளவிற்கு வாக்குகளாக மாறும் என்பது காலம்தான் பதில் சொல்லவேண்டும்.