Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குரு தசையின் பலன்கள் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia|
குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர்; வேதங்கள், உபநிடதங்களில் தேர்ச்சி பெற்றவர் என அவரது பெருமையை ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

உலகில் உள்ள அனைவருக்கும் நல்ல குரு (ஆசான்) அமைவது இல்லை. ஒரு சிலர் தனக்கு முதன் முதலில் கல்வி கற்பித்த ஆசிரியரை வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து பேசுவார்கள். சிலர் கல்லூரியில் கற்பித்த பேராசிரியரை மறக்க மாட்டார்கள்.

ஒரு மாணவனுக்கு படிக்கும் போது குரு தசை (16 ஆண்டுகள் நடக்கும்) வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர் கிடைப்பார். பிற மாணவர்களுக்கு கிடைக்காத தனி கவனம், அன்பு, ஆதரவு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இருந்து குரு தசை நடக்கும் மாணவனுக்கு கிடைக்கும்.
அதேபோல் குரு தசை நடக்கும் மாணவன் தேர்வில் எழுதும் பதிலும் அருமையாக இருக்கும். சொந்த நடையில் பதில் தருவார். கேள்விக்கு 100% சரியான பதிலாகவும் அது இருக்கும். கல்லூரிப் படிப்பின் போது குரு தசை நடந்தால் அந்த மாணவர் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பேராசிரியராகும் வாய்ப்பைப் பெறுவார்.

பொதுவாக 25 வயது முதல் 41 வயது வரையிலான காலத்தில் குரு தசை வந்தால், ‘சற்புத்திர யோகம’ கிடைக்கும். உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர் மீது முழுமையான அன்பு பிறப்பதில்லை. தந்தை மீதே சொத்துக்காக வழக்கு தொடரும் மகன்களும் இருக்கிறார்கள். அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் உணவளிப்பதில் கணக்குப் பார்க்கும் மகன்களும் உள்ளனர்.
ஆனால் சற்புத்திர யோகம் உள்ளவருக்கு பிறக்கும் குழந்தைகள், பெற்றோர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம் குரு தசை (தாய்/தந்தைக்கு) நடக்கும் காலத்தில் அந்தக் குழந்தைகள் பிறந்திருப்பர்.

இதேபோல் 41 வயதிற்குப் பின்னர் ஒருவருக்கு குரு தசை வந்தால் அவருக்கு ஆன்மிகத் தேடல் ஏற்படும். சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடுவார். பழமையான நூல்களை மீண்டும் பதிப்பிக்க உதவிபுரிவார். மேற்கூறிய அனைத்து பலன்களும் கிடைக்க சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம்/ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷபத்திற்கு நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார். மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும், கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார். துலாம் ராசிக்கும் 50% நற்பலன், 50% கெடு பலனே குருவால் கிடைக்கும். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் (பெரிய பாதிப்பும் கிடையாது, லாபமும் கிடையாது) கிடைக்கும்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :